இசையமைப்பாளர் தேவாவுக்கு அவுஸ்திரேலியாவில் உயரிய மரியாதை
தேனிசை தென்றல் தேவா, அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து கௌரவிக்கப்பட்டார்.
தேவாவுக்கு செங்கோல்
தமிழ் சினிமாவில் பலரது மனதிலும் தனது இசையால் இடம்பெற்றுள்ள இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் இவரை கௌரவித்ததற்கு தேவாவும் அவரது இசைகுழுவினரும் அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தேவா கூறுகையில், "அவுஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்கு கொடுத்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமையடைகிறேன்.
எனக்கும், எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இந்த கௌரவத்தை வழங்கிய லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் அவுஸ்திரேலிய அரசுக்கு நன்றி.
செப்டம்பர் 24-ம் திகதி அன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உள்ள அவைத்தலைவர் இருக்கையில் என்னை அமரவைத்து, செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இது உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் கலைஞர்களுக்கு சொந்தமானது . இந்த தருணத்தில் எனது ரசிகர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் தான் எனக்கு பலமே" என்றார்.
