சரும பொலிவை இரட்டிப்பாக்கும் தேங்காய் பீட்ரூட் சாதம்! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க
பீட்ரூட் அதிக ஆரோக்கிய நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட ஒரு காய்கறியாக அறியப்படுகின்றது. இது ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
பீட்ரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் ஆற்றல் காட்டுகின்றது. குறிப்பாக பீட்ரூட்டில் லைகோபீன் மற்றும் ஸ்குவாலேன் உள்ளிட்ட சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் கலவைகள் உள்ளதால், இது சரும பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கின்றது.

பீட்ரூட்டில் காணப்படும் விசேட வேதியல் கலவைகள் ஆன்டி-ஏஜிங் விளைவுகளை கொண்டிருப்பதோடு, முக சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது. நீண்ட காலத்துக்கு இளமை பொலிவுடன் வாழவேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் தினசரி உணவில் பீட்ரூட்டை சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதுபோல் தோங்காயிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கும், சரும பொலிவை பாதுகாப்பதற்கும் தேங்காய் பெரிதும் துணைப்புரிகின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பீட்ரூட் மற்றும் தேங்காயின் அற்புதமான கலவையில் அசத்தல் சுவையில் தேங்காய் பீட்ரூட் சாதம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 1 கப்
பீட்ரூட் - 1/2 கப்
தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
முந்திரி - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
உப்பு - சுவைக்கேற்ப
எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு மிக்சி ஜாரில் பீட்ரூட் மற்றும் தேங்காயை சம அளவில் எடுத்து கொரகொரப்பான பாதத்திற்பு அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கறிவேப்பிலை மற்றும் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பிறகு வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறுதியாக எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான தேங்காய் பீட்ரூட் சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |