நடிகை மீரா மிதுன் நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு! போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து நடிகை மீரா மிதுனுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலை செப்.9ம் தேதி வரை எழும்பூர் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின மக்களை நடிகை மீரா மிதுன் தரக்குறைவாக பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மீரா மிதுனை கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலுசார், கேரளாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, நடிகை மீரா மிதுனுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி வரை நீதிமன்றக் காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அவரது ஆண் நண்பர் அபிஷேக் ஷியாமும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாய்த்தவறி தவறாக பேசி விட்டதாக மீரா மிதுன் கூறிய போதிலும், அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பின்பு, மைக்கேல் என்பவரை அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இருப்பினும், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவரது நீதிமன்றக் காவல் முடிந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 9ம் தேதி வரை காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷியாமுக்கும் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
