அரிசி இல்லாமல் புரதம் நிறைந்த சிக்கன் புலாவ்!
ஆதிரா சேதுமாதவன்(Aathira Sethumadhavan), சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் உங்களுக்கான சுவையான அதேவேளை புரதச்சத்து நிறைந்த உணவு எப்படி செய்து என பரிந்துரைக்கிறார்.
கார்போஹைட்ரேட் குறைவாக புரதம் நிறைந்த சிக்கன் புலாவ் உணவை நாவூறும் ருசியிலும் மணத்திலும் தயாரிப்பது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது பாரம்பரிய அரிசிக்கு பதிலாக துருவிய காலிபிளவரை பயன்படுத்துவதால் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதுடன் முழுமையான சுவையையும் வழங்குகிறது.
தேவையான பொருட்கள்
- தயிர்- அரை கப்
- மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
- மல்லித்தூள்- 1 தேக்கரண்டி
- கரம்மசாலா- 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி
- உப்பு- தேவையான அளவு
புலாவ் செய்வதற்கு
- எண்ணெய்- தேவையான அளவு
- எலும்பில்லாத சிக்கன்- அரை கிலோ
- காலிபிளவர்- 2 கப் (துருவியது)
- பெரிய வெங்காயம்- 1 (மெல்லியதாக நறுக்கியது)
- பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு- அனைத்திலும் ஒன்று
- சீரகம்- அரை தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய்- 1 அல்லது 2 (பொடியாக நறுக்கவும்)
- தக்காளி- 1 (மெல்லியதாக நறுக்கியது)
- புளிக்கரைசல்- 1 தேக்கரண்டி
- புதினா, கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் நறுக்கிய வெங்காயம், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறம் ஆனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாசனை நீங்கிய பின்னர், சிக்கனை சேர்த்து கிளறிவிடவும், சிக்கன் நிறம் மாறும் போது ஏற்கனவே கலந்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும், இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லி, புளி கரைசல் சேர்க்கவும்.
இதனை அப்படியே 5 முதல் 7 நிமிடங்கள் விட்டுவிடவும், மசாலா ஒன்றாக சேர்ந்த பின்னர் உப்பு காரம் சரிபார்க்கவும், இதனுடன் துருவிய காலிபிளவர் சேர்த்து 1 அல்லது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.
வாணலியை மூடிவைத்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்கள் வேகவைக்கவும், கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் புலாவ் தயார்!!!