வீட்டில் சிக்கன் இருக்கா? செஃப் தாமு பாணியில் கொத்தமல்லி சிக்கன் குழம்பு செய்ங்க
வீட்டில் சிக்கன் இருந்தா எப்போதும் போல குழம்பு வகைகள் செய்யாமல் அதை கொத்தமல்லி அரைத்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த கொத்தமல்லி சிக்கன் குழம்பு செஃப் தாமுவின் ரெசிபியாகும். இந்த ரெசிபி பார்க்க பச்சை நிறத்தில் இருக்கும். சாதம் சப்பாத்திக்கு இந்த கொத்தமல்லி சிக்கன் குழம்பு சூப்பரா இருக்கும்.
செஃப் தாமோதரன் புகழ்பெற்ற பிரபல சமையல்காரர், தமிழ் மொழி தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் தனது திறமைகளை காட்டி விருதுகளையும் பெற்றுள்ளார்.
இப்போது இவரது பாணியில் கொத்தமல்லி சிக்கன் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோழி - 500 கிராம்
- எண்ணெய்
- தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
- கொத்தமல்லி இலைகள் - 1 கொத்து
- வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 2 முதல் 3
- பச்சை மிளகாய் - 3 முதல் 4
- இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
- முந்திரி பருப்பு - 3 முதல் 4
- கறிவேப்பிலை - சிறிது
- தேங்காய் - 1/2
- உப்பு சுவைக்கேற்ப
- இலவங்கப்பட்டை - ஒரு சிறிய துண்டு
- கிராம்பு - 1 முதல் 2
- ஏலக்காய் - 1 முதல் 2
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
- சீரக தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
- சான்ஃப் பவுடர் - 1
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். பின்னர் கொத்தமல்லி தூள், கொத்தமல்லி இலைகள், துருவிய தேங்காய், சிவப்பு மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்புகளை சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒரு நிமிடம் நன்றாக வதக்கி அதை நல்ல பேஸ்ட் போல அரைத்து எடுக்கவும். அடுத்து எண்ணெயை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், 1/8 டீஸ்பூன் சான்ஃப் பவுடர், கறிவேப்பிலை, வெங்காயத்தாள், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் சுத்தமாக்கி நறுக்கி வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சிக்கனில் வதங்கும் பொருட்கள் படும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் உப்பு, மிளகுத் தூள், மீதமுள்ள சான்ஃப் பவுடர் மற்றும் சீரகத் தூள் சேர்க்கவும். இதையும் நன்றாக கலக்கவும்.
கடைசியில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் அல்லது சிக்கன் வேகும் வரை கொதிக்க வைக்கவும். இதன் பின்னர் நாம் முன்னர் அரைத்த பேஸ்டை சேர்த்து கிளறி கொதிக்க வைக்கவும்.
பின்னர் குழம்பு கெட்டியாக ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, சாதம், தோசை, புலாவ் அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |