மக்கள் தொகை கணக்கெடுப்பு.., இணையத்தில் சுயமாக பதிவு செய்வது எப்படி?
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது.
2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் நேரடியாகவும், இணையதளம் மூலம் சுயமாகவும் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.

சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி?
முதலில் se.census.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து கேப்சாவை உள்ளிட வேண்டும்.
அதன்பிறகு குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண் மற்றும் விருப்பம் இருந்தால் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பின்னர் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும்.
அதன்பிறகு மாவட்டம், அஞ்சல் குறியீடு, கிராமம் அல்லது நகரம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து வரைபடத்தில் உங்கள் குடியிருப்பை சரியாகக் கண்டறிந்து, சிவப்பு குறியீட்டை சரியான இடத்தில் வைத்து இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
அதன்பிறகு வீடு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். பின் இவற்றை சரிபார்த்து, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.
பின்னர் தகவல்களை வரைவு நிலையில் சேமிக்கலாம் அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம். சமர்ப்பித்த பிறகு, மொபைல் எண்ணுக்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, அந்த எஸ்.இ. ஐ.டியை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அவர் பதிவு செய்த தகவல்களை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்களை மேற்கொள்வார்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்யலாம்.