மலச்சிக்கல் பிரச்சினையால் அவதியா? அலட்சியம் வேண்டாம் ஆபத்தாம்
இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அனைவரும் எடுத்துக்கொள்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பினால், பலரது பதில் இல்லை என்றே வரும்.
அந்த அளவிற்கு மக்கள் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு அடிமையாகி பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்று தான் மலச்சிக்கல் பிரச்சினை.
மலச்சிக்கல் பிரச்சினையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது பல வியாதிகளில் நம்மை கொண்டு சென்றுவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
மலச்சிக்கல் பாதிப்பிலிருந்து மீள இரண்டு விசயங்கள் அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதும், அதிகமாகத் தண்ணீர் குடிப்பதும் அத்தியாவசியமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
வளர்ந்த நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 35 முதல் 45 கிராம் வரை நார்ச்சத்து அவசியம். குழந்தைகளுக்குக் குறைந்தது 25 கிராம் அளவுக்காவது நார்ச்சத்து கொடுக்கப்பட வேண்டும். இந்த நார்ச்சத்து காய்கறி உணவுகளில் தான் அதிகம். அதைத் தவிர பதப்படுத்தப்படாத அரிசி, சிறுதானியங்களில் நார்ச்சத்து இருக்கின்றது.
ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு பழங்களாவது சாப்பிட வேண்டும். இதற்கு அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களே போதுமானவை. நம்முடைய தட்பவெப்பநிலைக்கு ஏற்ற, நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த பழங்களை சாப்பிடலாம்.
வயதானவர்கள் மென்று சாப்பிட முடியாத காரணத்தினால் காய்கறிகள், பழங்களை தவிர்த்து விடுவார்கள். இதனால் மலச்சிக்கல் வரும் ஆபத்து உள்ளதால் சிறுதானிய உணவுகளை கூடுதலாக வேக வைத்து சாப்பிடலாம்.
நார்ச்சத்து மட்டும் அல்லாமல் அதனுடன் சேர்த்து நீர்மோர், சூப், ரசம் என திரவ உணவுகளையும் சாப்பிட பழகினால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.