காலிப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா? வெங்கடேஷ் பட்டின் ரெசிபி இதோ!
நாம் எல்லோரும் நொறுக்குத்தீனி பண்டங்கள் சாப்பிடுவது என்றால் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். மாலைநேரங்களில் காபி அல்லது டீ குடிக்கும் சந்தர்பங்களில் எதாவது காரமாக சாப்பிடுவதை விரும்புவார்கள்.
இந்த நேரத்தில் அருமையாக செய்வதற்கு என்று ஒரு ரெசிபி உள்ளது. அது வேறெதுவும் இல்லை காலிஃப்ளவர் மல்லி ப்ரை தான்.
இந்த ரெசிபி மிகவும் பிரபலமான செஃப் வெங்கடேஸ் பட்டினின் ரெசிபியாகும். இப்போது இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காலிஃப்ளவர் - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு - 3/4 டீஸ்பூன்
- சோள மாவு - 3/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- அரைப்பதற்கு
- கொத்தமல்லி - 1/2 கட்டு
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 4 பல்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதை நன்றாக கொதிக்க விட்டு அது கொதித்ததும் கீழே இறக்கி வைத்து அதில் துண்டுகளாக வெட்டிய காலிஃப்ளவர் போட்டு 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அந்த காலிஃப்ளவரை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் எடுத்துவைத்த காலிப்ளவருடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு, அரைத்த கொத்தமல்லி விழுது, சோள மாவு, கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
பின்னர் பிசைந்து வைத்துள்ள காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால் சுவையான காலிப்ளவர் கொத்தமல்லி தயார்.