கண்ணை கவரும் ஆரஞ்சு நிறத்தில் Carrot Milkshake: பலன்கள் என்னென்ன?
ஆரஞ்சு நிறத்தில் கண்ணைக்கவரும் கேரட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புசத்து, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் அதிகளவு நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடன்டுகளால் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது.
ஆரோக்கியமான கண்கள், சருமம் என உடலில் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மாலை மற்றும் இரவு நேரங்களில் கண்பார்வை மங்கலாவதை தடுக்கிறது, குறிப்பாக கண் சம்மந்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.
மேலும் இது ஆன்டி ஆக்சிடன்டாக செயல்படுவதால் புதுபுது செல்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும், இதனால் வயதாவதை தடுக்கிறது, முதுமை வயதிலும் இளமையாக பளபளவென ஜொலிக்கலாம்.
தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வரும் போது உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து வெளியேறும், ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதும் தடுக்கப்படுவதால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
கேரட்டை கடித்து மென்று சாப்பிடும் போது பற்களில் உள்ள பக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படும், இதனால் பல் தொடர்பான நோய்களும் வராது.
மிக முக்கியமாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது. இப்படி பல நன்மைகளை அள்ளித்தரும் கேரட்டை கொண்டு மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையானவை
துருவிய கேரட் – ஒரு கப்
கெட்டியான பால் – ஒன்றரை கப்
சர்க்கரை – 2 டீஸ்பூன்
செய்முறை
கேரட்டை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு பாலை ஊற்றி, மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்தால் சுவையான மில்க் ஷேக் தயார்!!