பாலில் சர்க்கரை/வெல்லம் கலந்து குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? மருத்துவர் கூறும் உண்மைகள்
குழந்தைகள் முதல் முதியவர் வரை தினமும் நாம் அன்றாடம் எடுக்கும் உணவின் மூலம் கால்சியம் சத்து கிடைப்பது என்பது கட்டாயத்தேவையாகும்.
குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சியிலும் அதன் மூலம் உடல் வளர்ச்சியிலும் பெரியவர்களுக்கு உறுதியான எலும்பை கட்டமைப்பதிலும் அதன் மூலம் ஸ்திரமான உடல் வலிமையையும் நிலைநாட்டுவதில் கல்சியம் சத்தின் பங்கு இன்றியமையாதது.
கல்சியம் சத்தின் பங்கு பற்றிய தகவல்களை தெரிவிக்கிறார் Dr.A.B.ஃபரூக் அப்துல்லா (பொது நல மருத்துவர்)
கல்சியத்தின் பங்கு
குழந்தைகளுக்கு 700 மில்லிகிராம் கல்சியமும் முதியோர்களுக்கு தினமும் 1000-1200 மில்லிகிராம் கல்சியமும் கட்டாயத்தேவையாக இருக்கின்றது.
இந்த கல்சியம் சத்தை வழங்குவதில் எளிமையான & முக்கியமான பங்காற்றுவது நாம் அன்றாடம் பருகும் "பால்" என்றே கூறலாம்.
ஆனால் தினமும் மூன்று கப் பால் பருகுவோருக்கு கூட கல்சியம் பற்றாக்குறை இருப்பதையும் எலும்புகள் நொடிந்து போவதையும் வலிமை இன்றி இருப்பதையும் காண முடிகின்றது.
இதற்கான முக்கியமான காரணமாக நான் பார்ப்பது நாம் அன்றாடம் பருகும் பாலில் சீனி, நாட்டு சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற ஏதோ ஒரு இனிப்பு தரும் விசயத்தைக் கலந்து பருகுகிறோம் ஆனால் பாலுடன் சர்க்கரை சேர்ந்து பருகப்படும் போது நமது குடலின் கல்சியம் கிரிகித்துக்கொள்ளும் தன்மையை மட்டுப்படுத்தி விடுகின்றது.
இதை MALABSORPTION என்போம் ஒருவர் குறிப்பிட்ட சத்து தரும் பொருளை உணவாக உட்கொள்ளாத நிலையை Malnutrition என்போம் ஆனால் அவர் சத்துள்ள உணவுகளை உட்கொண்டும் அந்த சத்துகள் அவரது உடலுக்குள் செல்லாமல் இருப்பதை Malabsorption என்கிறோம் நம்மில் பலர் பா கால்சியம் Malabsorption நிலையில் இருப்பதற்கு நாம் பாலுடன் இனிப்பு சேர்த்து பருகும் பழக்கம் முக்கியமான காரணமாக இருக்கலாம்.
பாலுடன் சர்க்கரை கலந்து பருகக்கூடாது
கல்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களை நமது சிறுநீரகங்கள் சேர்த்து வைத்துக்கொள்ளாமல் துரிதமாகவும் அதிகமாகவும் வெளியேற்றி விடுகின்றன.
நமது உடலின் எலும்புகளில் கால்சியம் சேர வேண்டும் என்றால் ரத்தத்தில் விட்டமின் டி அளவுகள் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் நாம் உண்ணும் சர்க்கரை விட்டமின் டியை மட்டுப்படுத்தி விடுகின்றது.
நமது உடலில் எலும்புகளை வலிமைப்படுத்தும் செல்கள் osteoblasts எலும்புகளை உருக்கும் செல்கள் osteoclasts நாம் உண்ணும் சர்க்கரை, எலும்புகளை வலிமைப்படுத்தும் ஆஸ்டியோ க்ளாஸ்ட்களை குறைத்து எலும்புகளை உருக்கும் ஆஸ்ட்டியோ க்ளாஸ்ட்களை அதிகமாக்குகின்றன.
இதனால் கூடிய விரைவில் எலும்பு உருக்கி நோயான ஆஸ்ட்டியோ போரோசிஸ் ஏற்படுகின்றது. சாதாரணமாக இடறி விழுந்தாலும் இளையோர் முதல் முதியவர் வரை எலும்பு முறிவுகள் தோன்றுகின்றன.
குழந்தைகள் தங்களது கால்சியம் தேவையை அடைய நாளொரு முட்டை( மஞ்சள் கருவுடன்) கூடவே இரண்டு டம்ளர் கொழுப்புள்ள பால் ( இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட சத்து மாவுகள் கலக்காமல் ) பருகலாம் பெரியோர்கள் நாளுக்கு இரண்டு முதல் மூன்று முட்டைகள் ( மஞ்சள் கருவுடன்) கூடவே இரண்டு டம்ளர் கொழுப்புள்ள பால்( இனிப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட சத்து மாவுகள் கலக்காமல்) பருகலாம்.
தேனீர் ( Tea - டேனின்) காபி ( Caffiene) இவற்றைக் கலந்து பால் பருகப்படும் போதும் பாலினால் கிடைக்கும் கல்சியம் கிடைக்காமல் மட்டுப்படுகின்றது என்பதையும் பதிவு செய்கிறேன் எனது பரிந்துரை கால்சியம் குறைபாடுள்ள ரிக்கெட்ஸ் உள்ள குழந்தைகள்,
இனிப்பு சேர்க்காத பால் உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு
- மாலை நேர ஸ்நாக்ஸாக இரண்டு முட்டைகள் போட்ட ஆம்லெட் அல்லது அவித்த முட்டை அல்லது பொடி மாஸ்
- வாரம் ஒரு நாள் ஆட்டு எலும்பு மஜ்ஜை சூப்
- வாரம் ஒரு நாள் 100 கிராம் மீன் .
- மாமிசம் உண்ணாதோருக்கு தினமும் பால் கூடவே வெண்ணெய் 10 கிராம் கலந்து கொடுக்கலாம். ஆஸ்டியோ பீனியா மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெரியோர்கள்
- தினமும் மூன்று டம்ளர் கொழுப்புள்ள பால் இனிப்பு எதுவும் சேர்க்காமல் பருகி வர வேண்டும். உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு பருக வேண்டும்.
- டீ/காபி பருகுவதை தவிர்க்க வேண்டும்
- தினமும் மூன்று முட்டைகள் ஒரு வேளை உணவாக நீங்கள் விரும்பும் விதத்தில் சமைத்து உண்ணலாம்.
- மாமிசம் உண்ணாதோர் பாலில் பத்து கிராம் வெண்ணெய் கலந்து பருகலாம்.
கீரை , பீன்ஸ் போன்ற காய்கறி உணவுகளில் கால்சியம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவற்றில் அதிகமாக உள்ள ஆக்சலேட்டுகள் கல்சியம் கிரகித்தலை குறைத்து விடுகின்றன. எனவே அவற்றை கல்சியம் தரும் உணவுகளாக பயன்படுத்துதல் கூடாது.
கல்சியம் கலந்து சத்து மாத்திரைகளை மருத்துவர் அறிவுரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவைக்கு மீறி அதிக நாட்கள் பயன்படுத்துவது தவறு. அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சே.
கல்சியத்தை எலும்புகளில் பூசும் பணிக்கும் கால்சியத்தை உடலை கிரகித்துக் கொள்ளவும் விட்டமின் டி (VITAMIN D) யின் தேவை கட்டாயமானது.
எனவே தினமும் சூரியன் உச்சியில் இருக்கும் நேரங்களில் இருபது நிமிடங்கள் சன் பாத்/ சூரியக்குளியல் எடுப்பது பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும் ப்ராக்டிகலாக அவ்வாறு எடுக்க இயலாதவர்கள் வார இறுதி நாட்களில் முயற்சி செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் விட்டமின் டி அளவுகளை உதிரத்தில் உயர்த்த விட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் மருத்துவர் பரிந்துரையில் எடுக்கலாம்.
அவசியமான பின்குறிப்பு மேற்கூறிய அனைத்து பரிந்துரைகளும் சரியான உடல் நிலையில் உள்ள எந்த நோய்க்கும் ஆளாகாத நார்மல் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளவை.
இவை உணவு சார்ந்த பரிந்துரைகள் மட்டுமே. மற்றபடி தங்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் நோயோ கால்சியம் மற்றும் விட்டமின் டி 3 குறைபாட்டு நோயோ அல்லது குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் எனும் எலும்புருக்கி நோயோ இருப்பின் முறைப்படி மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டும்.