Cabbage momos: உடல் எடையை குறைக்க உதவும் முட்டைக்கோஸ் மொமோஸ்- எப்படி இலகுவாக செய்யலாம்?
தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள் காரணமாக உடல் பருமன் வயதிற்கு மீறி அதிகரித்து விடுகிறது.
இதனை குறைப்பதற்காக யோகா, உடற்பயிற்சி, டயட் உணவுகள் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியுள்ளது. அப்படி டயட்டில் இருப்பவர்கள் காய்கறிகளுடன் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளையும் எடுத்து கொள்ளலாம்.
அந்த வகையில், முட்டைக்கோஸ் மொமோஸ் செய்து சாப்பிடலாம். இதில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. முட்டைக்கோஸ் மொமோஸில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது.
அப்படியாயின், சுவையான முட்டைக்கோஸ் மொமோஸை எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* சீஸ் - சிறிது
முட்டைக்கோஸ் மொமோஸ் செய்வது எப்படி?
முதலில் முட்டைக்கோஸ் இலைகளை தனித்தனியாக பிரித்து எடுத்த பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் கொதிக்க வைக்கவும். நீர் நன்றாக கொதித்து வரும் பொழுது முட்டைக்கோஸ் இலைகளுடன் கொஞ்சமாக உப்பு சேர்த்து மூடிப்போட்டு வேக வைக்கவும்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேரட், குடைமிளகாய், சிறிது நறுக்கிய முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வதக்கவும்.
தேவையிருந்தால் வதங்குவதற்காக உப்பு லேசாக தூவிக் கொள்ளலாம். காய்கறிகள் வதங்கியவுடன், அதில் சோயா சாஸை சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்கி, பின் துருவிய சீஸை சிறிது சேர்த்து வதக்கி இறக்கவும்.
அடுத்து, வேக வைத்த முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, அதன் நடுவில் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளை வைத்து பீடா மடிப்பது போன்று மடிக்கவும். இப்படி முட்டைக்கோஸ் இலைகள் அனைத்திலும் காய்கறிகளை சுற்றி வைக்கவும்.
அதன் பின்னர், ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி உருகியதும், மடித்து தயார் நிலையில் இருக்கும் முட்டைக்கோஸை முன்னும், பின்னுமாக வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டைக்கோஸ் மொமோஸ் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
