இட்லி தோசைக்கு ஏற்ற முட்டைக்கோஸ் சட்னி - செய்வது எப்படி?
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள தினமும் ஒரே சட்னி அரைத்து பிடிக்காமல் இருக்கும்.
ஆனால், இந்த முட்டைகோஸ் சட்னி ஒரு சவாலாக இருக்கும். வித்தியாசமாக எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் தேவையான அளவு
நறுக்கிய முட்டைக்கோஸ் – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மிளகு – அரை டீஸ்பூன்,
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
தனியா விதை – அரை ஸ்பூன்,
வரமிளகாய் – நான்கு,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 1,
பழுத்த தக்காளி பழம் – 2,
நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
புளி – சிறு நெல்லிக்காய் அளவு,
தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன்,
உளுந்து – அரை ஸ்பூன்,
பெருங்காயம் – கால் ஸ்பூன்,
வர மிளகாய் – ஒன்று,
கருவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை விளக்கம்
முதலில் ஒரு கப் அளவிற்கு முட்டைகோஸை நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து பற்ற கொள்ளுங்கள்.
அதில், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, தனியா விதை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.
பின் தொடர்ந்து மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். உங்க காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய் வறுபட்டதும் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், பச்சை மிளகாய் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். இத்தோடு பொடி பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி பழங்கள் இரண்டை சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி மசிய வதங்கியதும் சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நாரெல்லாம் நீக்கி துண்டுகள் ஆக்கி போட்டுக் கொள்ளுங்கள். அனைத்தும், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வாருங்கள்.
அரைத்து எடுத்தவற்றிற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள்.
கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஒன்று கிள்ளி சேர்த்து, கருவேப்பிலையை போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி பாருங்கள்.
சுவையான இட்லி, தோசைக்கு வித்தியாசமான வகையில் முட்டைகோஸ் சட்னி தயார்...