கத்திரிக்காய், தக்காளி இருந்தா போதுமா? இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி செய்வது எப்படி?
காலை, மாலை வேளைகளில் இட்லி, தோசை சாப்பிடும் போது அதற்கு என்ன தொட்டுக்கொள்ள சாப்பிடலாம் என மிகுந்த யோசனையில் இருப்போம்.
அப்படியொரு நிலைமையில் இருக்கும் பொழுது கத்திரிக்காய், தக்காளி இவை இரண்டும் இருந்தாலே போதும். இதனை சரியாக பயன்படுத்தி குறைந்த நேரத்தில் சுவையான சட்னி செய்யலாம்.
இது போன்ற ரெசிபிகள் கிராமங்களில் இருக்கும் மக்கள் செய்து வருகிறார்கள். முக்கியமாக வேலை முடிந்து வீட்டிற்கு மிகவும் சோர்வாக வருபவர்கள், இந்த சட்னியை 10 நிமிடத்தில் செய்யலாம்.
அந்தளவில் அதிக வேலை இல்லாமல் எளிதில் செய்யக்கூடிய ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கின்றது. இதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளி பயன்படுத்தவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதன்படி, கத்திரிக்காய் மற்றும் தக்காளியை பயன்படுத்தி எப்படி சுவையான சட்னி செய்வது என தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 6
* நாட்டுத் தக்காளி - 6
* வரமிளகாய் - 5
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கல் உப்பு - 3/4 டீஸ்பூன்
சட்னி செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை எடுத்து அதன் தண்டை நீக்கி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
* பின்னர் வரமிளகாயை எடுத்து, நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தக்காளியை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கத்திரிக்காய், வரமிளகாய், தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தக்காளியில் உள்ள தோலை நீக்கிவிட வேண்டும்.
* இறுதியாக மத்து இருந்தால் அதை எடுத்து, குக்கரில் உள்ள பொருட்களை அப்படியே மசித்து விட வேண்டும். இப்படி செய்தால் சுவையான கத்திரிக்காய் தக்காளி சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |