பிரட் குலாப் ஜாமூன் சாப்பிட்டதுண்டா? அசத்தலான டிஷ் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்
வீட்டில் பிரட் இருந்தால் போது புது புது டிஷ்களை செய்து அசத்தலாக செய்து கொடுக்கலாம்.
பொதுவாக வீடுகளில் இனிப்பு உணவுகளை விரும்புபவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். அவர்களுக்கு புது விதமாக செய்து கொடுக்கலாம் பிரட் குலாப் ஜாமூன்.
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 4
பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி
பால் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ - தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அதைச் சுற்றியுள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட வேண்டும். பின் பிரட் துண்டுகளை வெட்டி, அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின் பொடித்த பிரட்டை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பால் பவுடரை சேர்த்து கலந்து, மெதுவாக பாலை ஊற்றி, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் அல்லது நெய் சூடானதும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, சர்க்கரை நன்கு கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
சர்க்கரை பாகு நன்கு கொதிக்கும் போது, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் 4-5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
சர்க்கரை பாகு ஒட்டும் பதத்தில் வரும் போது, அதில் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, பின் பொரித்து வைத்துள்ள ஜாமூனை சேர்த்து கிளறி, 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, மூடி வைத்து 1 மணிநேரம் கழித்து பரிமாறினால், சுவையான பிரட் குலாப் ஜாமூன் தயார்.