மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்!
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வரும் நேஹா பாத்திமாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் நோக்கில் அவரது பெற்றோர் திடீரென வந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மனமுடைந்த நேஹா, தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும், சாகத் தோன்றுவதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்
மலையாள பிக் பாஸ் 8வது சீசனை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.இதில் போட்டியாளராக இருக்கும் 20 வயது நேஹா பாத்திமாவுக்கும், 35 வயது தாஷி என்கிற சந்தோஷுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் கண்ணியமானதாக இருப்பதாகப் பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோரின் திடீர் வருகை
இந்நிலையில், வார இறுதி நிகழ்ச்சியின்போது நேஹாவின் பெற்றோர்களான யூடியூப் பிரபலம் ஷஹ்ரூபா சமீமும், தந்தை முகமது ஷமியும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர்.
மகளைப் பார்த்ததும் கண்ணீர் விட்ட தந்தை, “உனக்கு நாங்கள் யார் என்பது நினைவிருக்கிறதா?” என வேதனையுடன் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தாயார் சமீமும், மற்ற போட்டியாளர்கள் விளையாட்டை விளையாடும் நிலையில், நீ உணர்ச்சிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய்.

மற்றவர்கள் உன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனக் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் கண்ணீர் விட்ட நேஹாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் விரும்பினர். ஆனால் மோகன்லால் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன், நேஹாவையும் தனது விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.
இது மிகவும் கேவலமான திட்டம்
பெற்றோர் சென்ற பிறகு கடும் மன உளைச்சலுக்கு ஆளான நேஹா, தனது காதலைக் கண்டிப்பதற்காக பெற்றோரை பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தது நிகழ்ச்சியின் திட்டமா அல்லது வேறு யாருடைய திட்டமா என்று தெரியவில்லை.

ஆனால் யாருடைய திட்டமாக இருந்தாலும் இது மிகவும் கேவலமானது என சக போட்டியாளரிடம் ஆதங்கப்பட்டார். மேலும், தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும், சாகத் தோன்றுவதாகவும் கூறியிருப்பது பார்வையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் எந்தவொரு விபரீத முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கிடையே, இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலிப்பதால்தான் நேஹாவின் பெற்றோர் அவசரமாக வந்ததாகச் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |