பிக்பாஸ் மேடையில் அசத்திய ரம்யா கிருஷ்ணன் - வெறும் இரண்டு எபிசோடுகளுக்கு இத்தனை லட்சமா?
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கத் தொடங்கிய இந்நிகழ்ச்சி, தற்போது 10-வது சீசனை எட்டியுள்ளது. கடந்த மூன்று சீசன்களாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு அமோக வரவேற்பு
இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட தொண்டை வலி காரணமாக, கடந்த வார எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
தனது கம்பீரமான குரலாலும், அதிரடியான பேச்சாலும் போட்டியாளர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர், நிகழ்ச்சியைச் சிறப்பாக வழிநடத்தினார்.

ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அவரது கம்பீரமான அணுகுமுறையும், போட்டியாளர்களிடம் பேசிய விதமும் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. பலரும் அவரது தொகுப்பைப் பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இரண்டு எபிசோடுகளுக்கு ரூ. 30 லட்சமா?
திரைப்படங்களில் நடிப்பதற்காக அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன், பிக்பாஸ் 10 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக எவ்வளவு சம்பளம் பெற்றார் என்ற கேள்வியும் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தகவல்களின்படி, ரம்யா கிருஷ்ணன் ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ. 15 லட்சம் சம்பளம் பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்தக் கணக்கின்படி, இரண்டு எபிசோடுகளைத் தொகுத்து வழங்கியதற்காக அவர் சுமார் ரூ. 30 லட்சம் வரை பெற்றிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தச் சம்பள விவரம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |