உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் டெல்லி ஸ்டைல் கடலை மசாலா – பண்ணலாமா?
கொண்டைக்கடலை நமது பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ள சத்தான உணவாகும். ஆனால், அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இன்றும் பலருக்குத் தெரிவதில்லை.
மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கொண்டைக்கடலை, உடலின் ஆற்றல் உற்பத்திக்கும் தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

மேலும், இதில் உள்ள புரதமும் நார்ச்சத்தும் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொண்டை கடலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள் வேண்டியது அவசியம்.
கொண்டைக்கடலையை வழக்கமான முறையில் மட்டுமல்லாமல், சுவையான மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். அந்த வகையில், டெல்லியின் பிரபலமான கடலை மசாலாவை வீட்டிலேயே எளிய முறையில், சுவையாக எப்படித் தயாரிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – 1 கப் (8 மணி நேரம் ஊறவைத்தது)
உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்துத் துண்டுகளாக்கியது)
தண்ணீர் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1சிட்டிகை
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மசாலா தயாரிக்க
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை – 2
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 5
கருப்பு ஏலக்காய் – 2
பச்சை ஏலக்காய் – 3
பட்டை – 1 துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தக்காளி – 3 (அரைத்தது)
காஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
சன்னா மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு – ½ டீஸ்பூன்
பாலக்கீரை – ¼ கப் (அரைத்தது)
புளிச்சாறு – ¼ கப்
வெல்லம் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

தாளிப்புக்கு
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு (நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கியது)
காஷ்மீரி மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில், 8 மணி நேரம் ஊறவைத்த கொண்டைக்கடலையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, மூழ்கும் அளவு தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி 8 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிச் சூடானதும், பிரியாணி இலை, மிளகு, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளியைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கவும். இப்போது காஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சன்னா மசாலாத் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அதனுடன் அரைத்த பாலக்கீரையைச் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து புளிச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்துக் கலந்து, மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிடவும்.
இப்போது வேகவைத்த கொண்டைக்கடலையைத் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் கொண்டைக்கடலையை லேசாக மசித்துவிடவும்.

இது மசாலா கெட்டியாகவும் சுவையாகவும் இருக்க உதவும். வாணலியை மூடி வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இறுதியாக, ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் வரமிளகாய், சீரகம், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய இஞ்சி மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும்.
இந்தத் தாளிப்பைச் சன்னா மசாலாவில் சேர்த்து நன்கு கலந்துவிட்டால் அவ்வளவு தான் சுவையான டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |