புடவையை சேதப்படுத்திய டெய்லர்: நீதிமன்றம் வரை சென்ற வழக்கு! தீர்ப்பு என்ன தெரியுமா?
தைப்பதற்கு கொடுத்த சேலையை டெய்லர் சேதப்படுத்தியதால் சேலை உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரைச் சேர்ந்த மங்களா என்பவர் கடந்த 2019ம் ஆண்டு தனது மகளுக்காக 21 ஆயிரத்து 975 ரூபாய் மதிப்பிலான மைசூர் பட்டு புடவை ஒன்றை வாங்கியுள்ளார்.
பின்னர் மங்களாவும் அவரது மகளும், திவ்யா என்ற டெய்லரை அணுகி பட்டுப் புடவைக்கு ஃபால்ஸ் தைப்பதற்காக கொடுத்துள்ளனர். இதை பெற்றுக்கொண்ட டெய்லர் திவ்யா, சில நாட்களில் புடவையை தைத்துக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட நாளில் புடவையை கொடுக்காததுடன், மங்களாவை தொடர்பு கொண்டு பட்டுச்சேலையில் சில இடங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தான் கொடுக்கும் போது நன்றாக இருந்த புடவை எப்படி எரிந்தது? என கேட்டதுடன் புடவைக்கான பணத்தையும் தருமாறு கூறியுள்ளார்.
ஆனால் டெய்லர் திவ்யா தர மறுக்கவே, பெங்களூரு நகர நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே டெய்லரிடம் கொடுத்த பின்னரே சேலை சேதமடைந்துள்ளதாகவும், எனவே டெய்லர் திவ்யாவே சேலை சேதப்படுத்தியதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
சேலை விலையான 21 ஆயிரத்து 975 ரூபாயுடன் சேர்த்து நீதிமன்றம் கட்டணம் மற்றும் சேதப்படுத்தியதற்கான கட்டணம் என பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.