பீட்ரூட்டில் சுவையான வடை செய்து சாப்பிடதுண்டா?
தேநீருடன் ஏதாவது கடித்துக்கொள்ள இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிக்கிறீர்களா?
வித்தியாசமாக என்ன ஸ்நாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கும்போது காய்கறிகளிலேயே வித்தியாசமானதும் அழகிய வண்ணத்திலும் இருக்கும் பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.
இதன் சுவை மற்றும் நிறம் அனைவரையும் சாப்பிடத் தூண்டும். இனி பீட்ரூட்டை வைத்து எவ்வாறு பீட்ரூட் வடை செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துருவிய பீட்ரூட் - 1 கப்
அரிசி மா - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடலைப் பருப்பு - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
துருவிய வெ.பூண்டு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடலைப்பருப்பை சுடுநீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்பு அதை கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின்பு சோம்பு, இஞ்சி, வெ.பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை என்பவற்றையும் அரைத்து கடலைப்பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் அரிசி மா, துருவிய பீட்ரூட், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வடை பதத்துக்கு பிசையவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, தயாரித்து வைத்துள்ள மாவை வடைகளாக பொரித்தெடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை ரெடி!!!