இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன்... பெங்களூர் பாணி தேங்காய் சட்னி
Bangalore Hotel Style Coconut Chutney : தென்னிந்திய உணவு வகைகள் என்றாலே, இட்லி, தோசை, வடை போன்ற பாரம்பரிய உணவுகளுடன் இணைந்து நினைவுக்கு வருவது சுவையான சட்னி வகைகள்தான்.
குறிப்பாக, தேங்காய் சட்னிக்கு தென்னிந்திய சமையலில் தனி முக்கியத்துவம் உண்டு. எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதுடன், அதன் மணமும், மென்மையான சுவையும் பலரது உணவு மேசையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

தேங்காய் சட்னி இன்று தென்னிந்தியாவைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் விரும்பி சுவைக்கப்படும் சைட்டிஷ்சாக திகழ்கின்றது.
அதேவேளை, இதனைத் தயாரிக்கும் முறையும் பயன்படுத்தப்படும் பொருட்களும் பிராந்தியத்திற்கு ஏற்ப சிறிய அளவில் மாறுபடுகின்றன.ஒவ்வொரு பகுதியினரும் தங்களுக்கே உரிய பாணியில் தேங்காய் சட்னியைத் தயாரித்து, அதற்கு தனித்துவமான சுவையை வழங்குகின்றனர்.

அந்த வகையில், பெங்களூர் பாணியில் மணமும் சுவையும் நிறைந்த, வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய தேங்காய் சட்னியை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவில் விரிவாக
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – ½ கப்
பொட்டுக்கடலை – ¼ கப்
பச்சை மிளகாய் – 3முதல் 5
புளி – சிறிய துண்டு
சீரகம் – ¼ தேக்கரண்டி
பூண்டு – 2 பற்கள்
கறிவேப்பிலை – 1 கொத்து
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
சர்க்கரை – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
வர மிளகாய் – 1
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, புளி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும். சட்னியை மிகவும் மையாக அரைக்காமல், சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்தால் சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை லேசாகத் தெரியும் அளவுக்கு அரைத்தாலே போதுமானது. அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
கடுகு நன்றாகப் பொரிந்து, உளுந்தம் பருப்பு பொன்னிறமாக வந்ததும் இந்தத் தாளிப்பை சட்னியின் மீது ஊற்றிவிடுங்கள். அவ்வளவுதான், சுவையான பெங்களூர் பாணி தேங்காய் சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |