உட்கார்ந்தே வேலை செய்வதால் முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா? சரிசெய்ய எளிய வழி முறை!
பெரும்பாலும் முதுகுவலி வர காரணம் நம்முடைய தவறான வாழ்க்கை முறைதான் என்கிறார்கள் மருத்துவர்கள். துடிப்பான வாழ்க்கை முறையை விட்டு அமர்ந்தே வேலை செய்வது, நிற்கும், அமரும் விதம் தவறாக இருப்பது என முதுகுவலி வர ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
இதனால், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள்தான் முதுகுவலி என்று மருத்துவமனைக்கு வருகின்றனர். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது கீழ் முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி வலியைத் தருகிறது.
நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் போது முதுகெலும்பு தசைகள் இருக்கம் அடைகின்றன. செயல்பாடு குறைவு காரணமாக வலி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க அவ்வப்போது எழுந்து நடமாடினாலே போதுமானதாக இருக்கும்.
இதையடுத்து. 110 டிகிரி சாய்ந்த வகையில் இருக்கை இருக்க வேண்டும். இப்படி அமரும்போது முதுகெலும்பு பகுதியின் எடை முழுக்க நாற்காலியில் இறக்கும். இதனால் இடுப்புப் பகுதி மீதான அழுத்தம் குறையும்.
சரியான நிலையில் அமராதது, பின் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொண்டு அமர்வது போன்ற காரணங்களால் உடலின் அமைப்பில் மாறுதல் ஏற்படுகிறது. இப்படி தவறான பாஸ்ச்சர் தசை மற்றும் முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வுகளில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து வலியை ஏற்படுத்திவிடுகிறது.
மேலும், நாம் நிற்பது, நடப்பது, அமர்வது எல்லாம் சரியாக உள்ளதா என்பதைக் கவனித்து மாறுதல் செய்வதன் மூலம் முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பாதங்களைத் தொங்கவிட்ட படி அமரக் கூடாது. பாதங்கள் வைக்க சிறிய சாய்வு மேடை போன்ற அமைப்பைப் பயன்படுத்தலாம்.
இப்படி அமரும்போது ரத்த ஓட்டம் சீராகும். இடுப்புப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
முதுகெலும்பு ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதும் அவசியம். எனவே, உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள் உடல் எடையைக் குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.