அருமையான பேபி கோர்ன் மசாலா... சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்
பேபிகோர்னில் துத்தநாகம், கால்சியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது ஒருவருக்கு வலிமையை சேர்க்கிறது. அதுமட்டுமில்லாமல் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து நமது உடலிலுள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
இனி வித்தியாசமான பேபி கோர்ன் மசாலா எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
பேபி கோர்ன் - 1 பாக்கெட்
வெங்காயம் - 1
ப்ரஷ் க்ரீம் - 1 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி,வெள்ளைப் பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வதக்கி அரைக்க
வெங்காயம் - 1
வெள்ளைப் பூண்டு - 4 பற்கள்
தக்காளி - 2
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் பேபி கோர்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விட்டு இறக்கவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வதக்க கொடுத்துள்ள வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி குளிர்ந்ததும், அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியின் பட்டர் மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகத்தைப் போட்டு தாளித்து பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாகியதும் இஞ்சி,வெள்ளைப் பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்க்க வேண்டும்.
அதன்பின்பு அதில் மல்லித் தூள், மசாலாத் தூள், மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி, பின்னர் அதில் ப்ரஷ் க்ரீம் சேர்த்து பிரட்டவும். பின்னர் அதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
கிரேவியாக வந்ததும் அனலைக் குறைத்து 1 நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியாக பேபி கோர்னை நீருடன் சேர்த்து கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.