திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி
trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா அனுமதி வழங்கியுள்ளது.
அனயா பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.
இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம் 2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது. எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம் ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும். இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |