காபூலை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிசென்ற அதிபர்! எங்கு இருக்கிறார் தெரியுமா?
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் பயங்கராவாதிகள் அனைத்து பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதையடுத்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றுள்ளார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர்.
ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஓடு தளத்திலேயே வீசிவிட்டு அஷ்ரப் கனி தப்பி சென்றுள்ளார்.
இந்த தகவலை காபூலில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்ததாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை, அஷ்ரப் கனி தப்பிச்சென்ற விதத்தை வைத்தே முடிவு செய்து விடலாம் என அந்த செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டு இருக்கிறது.