எப்படியெல்லாம் யோசிக்கறாங்க... கூகுள் பே மூலம் நூதன கொள்ளை; சிக்கியது எப்படி?
காரில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்த கும்பல் கூகுள் பே மூலம் பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு எல்லாம், வழிப்பறி கொள்ளையர்கள் செல்போன், வாட்ச், செயின் போன்றவைகளை தான் பறிப்பார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் நூதன முறையில் கொள்ளையடிக்க கிளம்பிவிட்டார்கள்.
அந்த வகையில், மரக்காணத்தில் கல்லூரி மாணவரிடம் ஒரு கும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தை சேர்ந்த பிரின்ஸ் என்ற மாணவர் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இவர் அண்மையில், ஈசிஆர் சாலை வழியாக கடலூருக்கு காரில் சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறைத்துள்ளனர். இதன்பின்னர், 3 பேர் காரில் ஏறிக்கொண்டு, காரில் செல்லும் வழியில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
உடனே அவர் கையில் பணம் இல்லை எனக்கூறியதும், கூகுள் பே மூலம் ஒரு நபருக்கு 10,000 அனுப்ப சொல்ல அவரும் அனுப்பியுள்ளார். இதனை பெற்றுக்கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
இதுகுறித்து பிரின்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில் மரக்காணத்தை சேர்ந்த சேகர் பாபுவின் மகன் சவுபர் சாதிக், அஜித்குமார், பாலமுருகன், வினோத் உள்ளிட்ட 5 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.