வயிற்றில் இந்த பகுதியில் அதிக வலி ஏற்படுகின்றதா? உயிர் போகும் அபாயம் ஜாக்கிரதை
நமது பெருங்குடலில் குடல் வால் என்ற சிறிய குழாய் பகுதி காணப்படும். இந்த குடல் வாலில் வீக்கம் ஏற்படுவதைத் தான் நாம் குடல் வால் அழற்சி என்கிறோம்.
இந்த அழற்சி சாதாரணமான ஒன்றாக இருந்தால் கூட சீக்கிரமே இதற்கு சிகிச்சை அளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சுமார் 9 சதவீத ஆண்களும் 7 சதவிகித பெண்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு கட்டத்தில் குடல் அழற்சியைப் பெறுகிறார்கள் என்று நியூயார்க் நகரத்தில் உள்ள மருத்துவமனை கணக்கெடுப்பு கூறுகிறது.
இந்த குடல் வால் சிறியதாக நமக்கு பயனில்லாமல் இருந்தால் கூட இதில் ஏற்படும் பாதிப்பு நம் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த குடல் வால் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) குறிப்பாக இளம் வயதான 5 - 25 வயதிற்குரியவர்களை அதிகம் தாக்குகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
குடல் வால் அழற்சி
குடல் வால் அழற்சி ஏற்பட்ட 24 மணி நேரத்தில் இதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் சில நபருக்கு 3 நாட்களுக்கு அப்புறம் கூட அறிகுறிகள் தென்படுமாம்.
இந்த வீக்கம் பெரிதாகி அழற்சி குடல் வால் சிதைவதற்குள் அல்லது வெடிப்பதற்குள் நாம் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை நாம் லேப்ரோஸ்கோபி மூலம் செய்ய முடியும்.
ஆனால் சிலருக்கு அறிகுறிகள் தெரிவதே இல்லை என்பதால் இதை கண்டறிவதே கடினமாக உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் வயிற்றில் அழுத்தி கைகளை வைத்து குடல் வாலில் அழற்சி இருக்கிறதா என்று கண்டறிய வேண்டியுள்ளது.
இருப்பினும் குடல் வால் அழற்சியின் பொதுவான அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் உங்க சிகிச்சையை முன்னரே செய்ய முடியும். இதனால் உங்க உயிருக்கு ஆபத்து வருவதையும் நீங்கள் தடுத்துக் கொள்ளலாம்.
குடல் வால் அழற்சி ஏற்படக் காரணங்கள்
இந்த குடல் வால் அழற்சி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை. பாக்டீரியா, பூஞ்சை போன்ற குடல் வாலில் ஏற்படும் நோய்த் தொற்றுகளால் இது ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. தொற்று வீக்கமடைந்து குடல் வால் வெடிக்க ஆரம்பிக்கும்.
கீழ்கண்ட சில அடிப்படையான அறிகுறிகளை வைத்து, குடல் வால் அழற்சி இருப்பதை பிரச்சினையின் தீவிரத்துக்கு முன்பாகவே உங்களால் கண்டுகொள்ள முடியும். அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
குடல்வால் அழற்சி அறிகுறிகள் என்ன?
தொப்புளில் வலி உண்டாதல்
குடல் வால் வலி பெரும்பாலும் அடிவயிற்றின் கீழ் வலது பக்கத்தில் ஏற்படுகிறது. முதல் அறிகுறியாக வலி தொப்புளில் ஏற்பட்டு அப்படியே வலி அடிவயிற்றில் பரவ ஆரம்பிக்கும்.
குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் வெவ்வேறு பகுதிகளில் கூட வலியை உணர வாய்ப்புள்ளது. சிலருக்கு அடிவயிற்றை அல்லது கால்களை கூட நகர்த்த முடியாது. அப்படி செய்யும் போது வலி அதிகமானதாக உணர்வார்கள்.
இருமல், தும்மல், காரில் பயணிக்கும் போது ஏற்படும் குலுங்கல் இவற்றின் போதும் வலி தீவிரமாகும். நிறைய பேருக்கு தொப்புளுக்கு வலி எடுத்தால் அதை கண்டுபிடிக்கத் தெரியாது.
ஆனால் இந்த குடல்வால் அழற்சியைப் பொருத்தவரையில், வலி தீவிரமடைய ஆரம்பிக்கும். அதை வைத்துக் கண்டுபிடித்துவிட முடியும்.
வலியானது அடிவயிற்றில் தீவிரமாக ஆரம்பிக்கும். அப்பெண்டிக்ஸ் இருப்பவர்களுக்கு வலியின் தீவிரத்தால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க முடியாது.
காய்ச்சல் மற்றும் குளிர் ஏற்படுதல்
100 டிகிரி காய்ச்சல் என்பது உங்களுக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கலாம். ஆனால் 103 வரை காய்ச்சல் அடித்து எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது குடல் வால் அழற்சி யாக இருக்கலாம். வலியுடன் காய்ச்சலும் உங்களை கஷ்டப்படுத்த ஆரம்பிக்கும்.
வாந்தி, குமட்டல் மற்றும் பசியின்மை
குடல் வாலில் பிரச்சனை ஏற்பட்ட இரண்டு நாட்களுக்கு வாந்தி, குமட்டல் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
உங்களுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக வாந்தி இருந்தாலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தாலோ உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.
அடிவயிற்று வலியுடன் காய்ச்சல் நீடித்தாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு
உங்களுக்கு மலச்சிக்கல் அல்லது சளியுடன் வயிற்று போக்கு ஏற்பட ஆரம்பிக்கும். இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
வாயு மற்றும் வயிறு வீக்கம்
அடிவயிற்று வலியுடன் ஓரிரு நாட்களுக்கு மேல் வயிறு வீக்கமும், வாயுப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இருந்தால் உங்க குடல் வாலில் அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்த பிரச்சினை தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
வயிற்றை அழுத்தும் போது வலி ஏற்படுதல்
உங்கள் வலது அடிவயிற்று பகுதியை அழுத்தும் போது அந்த பகுதியில் வலியை உணர்வீர்கள். மறுபடியும் மறுபடியும் வலி உண்டாதல் அதனுடன் காய்ச்சல், குமட்டல் போன்ற பிற அறிகுறிகளும் தென்பட்டால் தாமதம் ஆகாமல் மருத்துவரை அணுகுங்கள்.
இதர பாதிப்புகள்
எக்டோபிக் கர்ப்பம், கிரோன் நோய், இடுப்பு அழற்சி நோய் மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளும் இதே அறிகுறிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே நீங்களாக ஒரு முடிவைப் பெற வேண்டாம். இது குடல் வால் அழற்சி தான என்று உறுதிப்படுத்த மருத்துவரிடம் செல்வதே சிறந்தது.
குடல் அழற்சியைக் கண்டறிய டாக்டர்கள் அல்ட்ராசவுண்ட் அல்லது வெள்ளை-இரத்த அணுக்களின் எண்ணிக்கையை (உங்களுக்கு தொற்று இருந்தால் அது அதிகமாக இருக்கும்) கொண்டு கண்டறிவார்கள்.
அறுவை சிகிச்சை அவசியம்
குடல் வால் வெடித்து விட்டாலோ அல்லது சிதைந்து விட்டாலோ வலி வயிற்றுப் பகுதி முழுவதும் பரவ ஆரம்பித்து விடும்.
எனவே அறிகுறிகளை முன்னரே அறிந்து அறுவை சிகிச்சை செய்து விடுவது உங்க உயிருக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.
சிகிச்சை முறைகள்
அப்பெண்டெக்டோமி அறுவை சிகிச்சை
லேபராஸ்கோபி கருவி மூலம் ஒரு பெரிய குழாயில் கேமிரா வைத்து பெருங்குடலில் செலுத்துவார்கள்.
பாதிக்கப்பட்ட குடல் வால் பகுதி கண்டறிந்த உடன் தொற்று அல்லது வீக்கம் இருக்கும் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் ரீமுவ் செய்து விடுவார்கள்.
ஆன்டிபயோடிக்ஸ்
அறிகுறிகள் சரியாக தெரியாவிட்டால் குடல் தொற்றை போக்க ஆன்டி பயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் குடல் வால் அழற்சி என்று தெரிந்து விட்டால் அதை ஆன்டி பயாடிக் மருந்துகள் கொண்டு குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கு சிறந்த தீர்வு என்கிறார்கள் மருத்துவர்கள்.