வீட்டில் அப்பளம் மட்டும் தான் இருக்கா! நாவூறும் சுவையில் அப்பள குழம்பு இப்படி செய்ங்க
மாத இறுதியில் வீட்டில் காய்கறி மற்றும் சமைக்கும் பொருட்கள் எல்லாம் முடிந்திருக்கும். இந்த சமயத்தில் ஏதாவது ஒரு குழம்பு அவசரமாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு அப்பளம் இருந்தால் போதும்.
இந்த அப்பளத்தை வைத்து சுவையான குழம்பு செய்து எடுத்துவிடலாம். இதை செய்வதற்கு காய்கறி எதுவும் தேவை இல்லை. தேவைப்பட்டால் நீங்கள் பயன்படுத்தலாம்.
இதை சூடான சாதத்தில் நேரடியாக ஊற்றி வேறெதுவும் வைத்துக்கொள்ளாமல் சாப்பிடலாம். அரைமணி நேரத்தில் சுவையான அப்பள குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அப்பள குழம்பு செய்ய தேவையானவை
- அப்பளம்
- காய்ந்த மிளகாய்
- பூண்டு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- கடுகு
- கறிவேப்பிலை
- பெருங்காய தூள்
- சாம்பார் தூள்
- தண்ணீர்
- புளி தண்ணீர்
- வெல்லம்
- வெந்தயம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். இது சூடானதும் 5 காய்ந்த மிளகாய் போட வேண்டும். இதன் பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கால் ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, பத்து பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின் இரண்டு தக்காளியை நறுக்கி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து கால் ஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் சாம்பார் தூள், அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
இது இரண்டு கொதி வந்த பின்னர் எலுமிச்சை அளவு புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்து கடாயில் ஊற்றி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். சுவையை சற்று அதிகரிக்க ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.
மீண்டும் 250 மில்லி தண்ணீர் ஊற்றுங்கள். 8 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும். அடுத்ததாக 5-6 அப்பளங்களை இரண்டாக உடைத்து குழம்பில் போட்டு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிட வேண்டும்.
இறுதியாக ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தனியாக வறுத்து மிக்ஸியில் அரைத்து அதில் பாதி ஸ்பூனை இந்த குழம்பில் போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். இப்போது சுவையான அப்பள குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |