ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சிக்கன்... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே சிக்கன் எந்த விதமான முறையில் சமைத்தாலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக அசைவ உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் தனி இடத்தைப் பெற்றுள்ளது.
வறுவல், குழம்பு, கிரேவி என பல்வேறு வகைகளில் சமைக்கப்படும் சிக்கன், ஒவ்வொரு முறையிலும் ஒரு புதிய சுவை அனுபவத்தை தரக்கூடியது. அதனால் தான் பெரும்பாலானோரின் விருப்பமான உணவுப் பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

குறிப்பாக சிக்கனை காரசாரமான மசாலாக்களுடன் சமைக்கும்போது அதன் சுவையும் மணமும் மேலும் அதிகரித்து, உணவை இன்னும் சுவையாக மாற்றுகிறது. காரம் மற்றும் மசாலா கலந்த உணவுகளுக்கு புகழ்பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான்.
அந்தவகையில், ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கனை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் எப்படி செய்வதென் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 20 (அரைத்தது)
நெய் - 2 தே.கரண்டி
எண்ணெய் - 1 தே.கரண்டி
இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி
தண்ணீர் - அரை கப்
சோயா சாஸ் - அரை தே.கரண்டி
வினிகர் - 1 தே.கரண்டி
சோள மாவு - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பச்சை மிளகாய் விழுது சேர்த்து சுமார் 3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சிக்கனைச் சேர்த்து அடிக்கடி கிளறிவிட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இரண்டு நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் நன்றான வேகவிட வேண்டும்.
பின்னர் சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து சோளமாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி அதை சிக்கனில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நன்றாக வேக வைத்து சிக்கனை இறக்கினால் அவ்வளவு தான் ஆந்திரா பாணியில் சில்லி சிக்கன் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |