ஆந்திரா பாணியில் காரசாரமாக கத்திரிக்காய் சட்னி... பண்ணலாமா?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய கத்தரிக்காயில் ஏராளமான மருத்துவப் குணங்கள் உள்ளன.
அவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. குறிப்பாக, கத்தரிக்காய் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் ஆற்றல் காட்டுகின்றது.

கத்தரிக்காய் சாப்பிடுவதால் மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மற்றும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு வரபிரசாதம் என்றே கூறவேண்டும்.
மேலும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது.
கத்தரிக்காய் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், தொப்பையை குறைக்க வேண்டும் என போராடுபவர்களுக்கு கத்தரிக்காய் ஒரு சிறந்த தெரிவாக இருக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காய்யில் அசத்தல் சுவையில் எவ்வாறு கத்தரிக்காய் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நீள கத்திரிக்காய் - 10
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 8
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
எண்ணெய் - 1தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பூண்டுப் பல் - 5
செய்முறை

முதலில் கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும், முதலில் பச்சை மிளகாயை வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர் அதே எண்ணெயில், கத்திரிக்காய்கள் குழைந்துவிடாமல், மென்மையாகும் வரையில் வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதே பாத்திரத்தில், தக்காளிகள் மென்மையாகும் வரை வறுக்கவும். சிறிது உப்பு சேர்த்து, மூடியால் மூடி வைக்க வேண்டும்.
அடுப்பை அணைப்பதற்கு முன், நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து, 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.
வறுத்த பொருட்களை ஆறவிட்டு பி்ன்னர், ஒரு மிக்சி ஜாரில், புளி, பச்சை மிளகாய், சீரகம், பூண்டு பற்கள் மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வதக்கிய தக்காளியைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை மீண்டும் அரைக்கவும்.
பின்னர் வதக்கிய கத்தரிக்காயையும், நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து அரைக்கவும். மென்மையாக அரைக்கக்கூடாது, இந்த சட்னி கெட்டியாக மற்றும் கொரகொரப்பாக அரைத்தால்தான் சுவை பிரமாதமாக இருக்கும்.
இந்த சட்னியை அப்படியேவும் சாப்பிடலாம், விரும்பினால் ஒரு பாத்தித்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்து சேர்த்து தாளித்து சட்னியுடன் கிளற வேண்டும்.
இந்த கத்தரிக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சாப்பிடவும் பிரமாதமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |