'ஜனநாயகன்' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதால் கதறி அழுத நடிகை ஆனந்தி! என்ன காரணம்?
நடிகர் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகும் முன் ஏதாவது ஒரு சர்ச்சையையோ, சிக்கலையோ சந்திப்பது ரசிகர்களுக்கு புதிதல்ல. அந்த வரிசையில், அவரது கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், ரசிகர்களின் அந்த ஆசை இந்த முறையும் நிறைவேறவில்லை. திரைப்படம் வெளியாவதற்கு முன் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சனைகள் எழுந்ததால், படக்குழுவும் ரசிகர்களும் பெரும் பதற்றத்தில் இருந்தனர்.

வெற்றிநடை போடும் ஜனநாயகன்
தணிக்கைச் சான்றிதழ் முன்கூட்டியே கிடைத்திருந்தால், ரசிகர்களுக்கு அது பொங்கல் கொண்டாட்டத்தைப் போல அமைந்திருக்கும். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி படம் வெளியானதும், முதல் நாளையே ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினர்.

வசூலில் மிரட்டிய 'ஜனநாயகன்' வெளியான முதல் நாளிலேயே 'ஜனநாயகன்' வசூலில் அதிரடி காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் ரூ.6 கோடி வரை வசூல் செய்ததாகவும், உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.90 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
"ஜனநாயகன் சூப்பர்", "தளபதி மாஸ்", "பிளாக்பஸ்டர்" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மறுபுறம் நடிகை ஆனந்தி வெளியிட்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொளி
அந்த வீடியோவில் பேசிய ஆனந்தி, திருமணத்திற்கும் குழந்தை பிறந்த பிறகும் முதன்முறையாக கமிட்டாகி நடித்த திரைப்படம் 'ஜனநாயகன்' தான் என்று தெரிவித்துள்ளார்.
அதிலும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு முக்கியமான காட்சியில் நடித்தது தனது நீண்டநாள் ஆசை நிறைவேறிய தருணம் என்றும் கூறியுள்ளார்.

இந்த காரணத்தால் மிகுந்த ஆவலுடன் குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்ததாகவும், ஆனால் படம் முழுவதும் தனது காட்சிகளை எதிர்பார்த்து காத்திருந்தபோதும், இறுதியில் தான் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்ததாகவும் அவர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
"விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது. ஆனால் அந்த காட்சிகள் ரசிகர்களை சென்றடையவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது," என்று கண்கலங்கியபடி அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆனந்திக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |