பெண்கள் பாதுகாப்பு: ஆண்களுக்கும் சிறுவயதிலிருந்தே விழிப்புணர்வு தேவை - நடிகை ரேவதி ஓபக் டாக்!
பெண்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசுவதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை ரேவதி தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் கவகம் ஈர்த்து வருகின்றது.
‘பாரத் சோகா கக்காய்’ அறக்கட்டளை சார்பில், ‘பெண்களின் நூற்றாண்டு என்னிடம் இருந்து தொடங்குகிறது விழிப்புணர்வில் இருந்து செயல்பாட்டுக்கு’ என்ற தலைப்பில் 6-வது மகளிர் கருத்தரங்கம் சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை ரேவதி, ‘வரசக்தி ஹவுசிங் பைனான்ஸ்’ நிறுவன இயக்குநர் கல்பனா சங்கர், ‘யெய்ன் உடான்’ நிறுவனர் வேதிகா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகை ரேவதியின் கருத்து
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரேவதி கூறியதாவது: “பெண்கள் கல்வி, பொருளாதாரம், விண்வெளி ஆய்வு என பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனைகளைப் படைத்து வருகின்றனர். ஆனால், பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.
சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு சம்பவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களின் முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதைவிட, முதலில் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே பெண்களை மதிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் நிலையில், படித்த குடும்பங்களில்கூட குடும்ப வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண்களை ஆண்களைவிட உயர்வாகக் கருதுவதோ, ஆண்களை வெறுப்பதோ பெண்ணியம் கிடையாது.பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் அவசியம்” என தெரிவித்துள்ளார்.
மாற்றம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரேவதி, “சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.
அந்த வாய்ப்புகளைப் பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களது திறமையின் மூலம் முன்னேறி வருகின்றனர். ஆனால், சமூகத்தில் பெண்களின் நிலையை உண்மையாக மாற்ற வேண்டுமெனில், அதற்கான மாற்றம் வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும்.
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என பெண்கள் இயங்கும் அனைத்து இடங்களிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |