தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: குடும்பத்துடன் சிகிச்சை பெறும் நடிகை மீனா
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவ்வகையில், பிரபல நடிகை மீனாவின் குடும்பத்திற்குள்ளும் கொரோனா வைரஸ் தொற்று நுழைந்துள்ளது. மீனா உள்பட அவரது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அதிர்ச்சிகரமான தகவலை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “2022ல் எனது வீட்டிற்கு வந்த முதல் பார்வையாளர் கொரோனா. அது என் முழு குடும்பத்தையும் பிடித்துள்ளது. ஆனால் நான் அதை இருக்க விடப்போவதில்லை. மக்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருங்கள். தயவுசெய்து பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். பொறுப்பாக இருங்கள். இந்த வைரசை பரவ விடாதீர்கள். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மீனா கூறி உள்ளார்.
1990களில் பிரபலமான கதாநாயகியான வலம் வந்த மீனா, திரையுலகில் கொடிகட்டிப் பறந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன் லால், கார்த்திக், பிரபு, விஜயகாந்த் மற்றும் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடத்துள்ளார்.
மீனா மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.