கார்த்திக்கு எந்த நம்பிக்கையில் பெண் கொடுத்தார்கள் தெரியவில்லை- நடிகர் சிவகுமார்
பருத்தி வீரன் படத்தை பார்த்த பிறகு வேறு ஒருவராக இருந்திருந்தால், நிச்சயம் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கமாட்டார்கள் என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சிவகுமார் பேச்சி
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.
சூலூர் அருகே உள்ள காசி கவுண்டன் புதூர் கிராமத்தில் தனது பள்ளிப் படிப்பை தொடங்கியதாக அவர் கூறினார்.
அப்போது அந்த ஊரில் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என தெரிவித்தார்.
தன்னுடன் பள்ளியில் படித்த 11 பேரில், பலரும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும், 1957ஆம் ஆண்டு தான் மட்டும் 10ஆம் வகுப்பை முடித்ததாகவும் சிவகுமார் கூறினார்.

இதையடுத்து சென்னைக்கு வந்து 7 ஆண்டுகள் ஓவியம் படித்ததாகவும், அந்த துறையில் எதிர்காலம் இல்லை என முடிவு செய்து சினிமாவுக்குள் வந்ததாகவும் தெரிவித்தார்.
சினிமா நிரந்தரமான தொழில் இல்லை என்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டதாகவும், 38 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் சிவகுமார் கூறினார்.
அப்போது சினிமாக்காரருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கார்த்தி குறித்து பேசிய சிவகுமார், "பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வேறு ஒருவராக இருந்திருந்தால் கார்த்திக்கு பெண் கொடுத்திருக்கமாட்டார்கள். அந்தப் படத்தில் அப்படியொரு ராட்சத தோற்றத்தில் நடித்திருந்தார்.
நானே இருந்திருந்தாலும் பெண் கொடுத்திருக்கமாட்டேன், எந்த நம்பிக்கையில் கார்த்திக்கு பெண் கொடுத்தார்கள் என தெரியவில்லை" என்றார்.