87 வயதில் காலமானார் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி - சினிமா வெற்றியின் ஒரு பார்வை
மூத்த மற்றும் பிரபல திரைப்பட நடிகை சோபனப் சரோஜா தேவி இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
அவருக்கு வயது 87. அவரது மறைவு திரையுலகத்தையும் ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
திரையுலகில் ஒரு தவம்
சரோஜா தேவி தனது திரையுலக பயணத்தை கன்னட திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றதன் மூலம் அவரது திறமை தெளிவானது.
பின்னர் 1958ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எட்டினார். 1959ல் கல்யாணபரிசு படத்தில் நடித்ததும் அது மாபெரும் வெற்றியை பெற்றது.
சிறந்த கூட்டணிகள் – தொட்ட இடமெல்லாம் வெற்றி
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் திரையுலகில் இணைந்து சரோஜா தேவி நடித்தார்.
பார்வையாளர்களின் மனதில் நிலைத்து நின்று விட்ட படங்கள் அடிப்படையில் பார்த்தால் பார்த்திபன் கனவு, அன்பே வா, ஆசை முகம், ஆலையமணி, எங்கள் வீட்டுப்பிள்ளை, கல்யாண பரிசு போன்றவையாகும்.
ஒரே நாளில் 18 மணி நேரம் வரை நடித்த அவரது உழைப்பும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கலையமைந்த நடிப்பும் அவரை தனிச்சிறப்பாக உயர்த்தின.
விருதுகளும் பாராட்டுகளும்
சரோஜா தேவி இந்திய அரசால் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், பல மாநில அரசு விருதுகளும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பட வரலாறு
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருடைய கடைசி திரைப்படம் 2009ஆம் ஆண்டு சூர்யா நடித்த ஆதவன் படமாக அமைந்துள்ளது.
மறைவுக்குப் பின்னால்
மூத்த நடிகை சரோஜா தேவியின் மறைவு, தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போலவே உணரப்படுகிறது. தமிழ்த் திரையுலகில் அவருடைய பங்களிப்பு என்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |