ஆடி 18ம் பெருக்கு! பெண்கள் புதுத்தாலி மாற்றுவது எதற்காக? ஆசீர்வாதம் பெருகுமாம்
மங்களகரமான மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் புதுத்தாலி மாற்றுவது ஏன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
இம்மாதத்தில் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அம்மன் அள்ளி வழங்குவார் என்பது ஐதீகம். பெண்கள் ஆடி பதினெட்டாம் நாள் கோவில்களுக்கு சென்று நதிக்கரைகளில் நீராடி, பெண்கள் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி புதன்கிழமை ஆடி 18ஆம் பெருக்குகாவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும்.
ஆடி மாதம் என்றால் என்ன?
ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது.
இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.
இந்த நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இந்த நாளில், சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.
புதுத் தாலி மாற்றுவது ஏன்?
பெண்கள் புதுத்தாலி மாற்றுவதற்கு காரணம் என்னவெனில், கணவர் கையால் புதுத்தாலி மாற்றும் பெண்கள் நீண்ட நாட்களாக பெண்கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும் வாழ வேண்டும் என்பது ஐதீகம்.
பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு.
ஆடிப்பெருக்கன்று புதியதாக திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு.
திருமண பாக்கியம் வேண்டி பெண்கள்
இந்த விசேஷ நாளில் திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும், நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று அம்மனை வேண்டிய கழுத்தில் மஞ்சள் கயிற்றினைக் கட்டிக்கொள்வார்கள்.
அவ்வாறு செய்வதால் ஆடி மாதம் முடியும் முன்பு திருமணம் நிச்சயிக்கப்படும் என்ற நம்பிக்கை ஆகும்.
ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.