ஆடி மாதத்தில் இந்த நாட்கள் மிகவும் முக்கியமானவையாம்... ஏன் தெரியுமா?
ஆடி மாதத்தில் தான் அம்மன் அவதரித்தாள். அதோடு ஆடி மாதம் மழைக் காலத்தின் தொடக்கமாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் ஆடி மாதம் முழுவதும் மகத்துவம் நிறைந்த மாதமாக உள்ளது.
ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பானதாகும். ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள்.
நதியை பெண்ணாக வணங்கும் நாள். நுரை பொங்க இரு கரைகளையும் தொட்டுப் பொங்கி பெருகி ஓடும் காவேரியை மக்கள், 'வாழி காவேரி" என்று வாழ்த்தி பூக்களால் அர்ச்சித்து வணங்குவர். குடும்பத்துடன் நீராடி மகிழ்வார்கள்.
மேலும், ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். பொதுவாக பெருமாள் கோவில்களில் ஆண்டாளுக்கு தனி சன்னிதி இருக்கும்.
இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவாள். கருட பஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். பாற்கடலில் இருந்து வெளிவந்த ஆலகால விஷத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது.
நாக சதுர்த்தி விரதம் என்பது ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்குவதாகும். தங்கள் கணவரின் நலனுக்காகவும், பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் கடைபிடிக்க ஏற்ற நாளாகும்.
இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. இதில் மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும்.
அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.