கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு: ஆடி மாதத்தில் ராஜ யோகம் யாருக்கு?
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார்.
சூரியனின் தென்திசை பயணம் தொடங்குவதை நாம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று சொல்கிறோம். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கப் போகிறது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள். விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடி கிருத்திகை, ஆடி 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, பானு சப்தமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கடக ராசியில் சூரியன், செவ்வாய் சிம்ம ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு, ரிஷபத்தில் ராகு, மிதுன ராசியில் புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன.
ஆடி 4ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். 9 ஆம் தேதி புதன் கடக ராசியில் பயணம் செய்கிறார். 23ஆம் தேதி சிம்ம ராசிக்கு புதன் மாறுகிறார். ஆடி 26ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ஆகிய 6 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
துலாம்
சுக்கிரபகவானை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதம் பத்தாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். நன்மைகள் அதிகம் நிறைந்த மாதம். புதிய பதவிகள் தேடி வரும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் சுக்கிரன் லாப ஸ்தானத்திலும் இணைந்து பயணிப்பதால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அப்பாவின் பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் தேடி வரும் வீட்டில் விஷேசம் நடைபெறுவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. சொத்து வாங்கலாம். வீடு கட்டுவதற்கான வாஸ்து செய்யலாம். சுப காரியங்கள் செய்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. புதிய வரவுகள் கை கூடி வரும். நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும். நண்பர்கள் உதவியால் சந்தோஷ நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவி உறவில் அந்நியோன்னியம் அதிகரிக்கும். ஆடி அமாவாசை நாளில் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, பாக்ய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் முன்னோர்களின் சொத்துக்கள் கை கூடி வரும். கடவுள் அனுக்கிரகமும் முன்னோர்களின் அனுக்கிரகமும் சேர்ந்து கிடைக்கப் போகிறது. பத்தாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைந்திருப்பதால் புதிய வேலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாற்றமும் முன்னேற்றமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
திருமணம் சுப காரியம் தொடர்பாக பேச முயற்சி செய்யலாம். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதுவும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. இளைய சகோதரரின் உதவிகள் கிடைக்கும். நன்மைகள் நடைபெற ஆடி வெள்ளியில் அம்மன் வழிபாடு செய்வது நன்மையைக் கொடுக்கும்.
தனுசு
வீடு வாகனம் சொத்துக்கள் வாங்க கடன் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். சூரியன் எட்டில் பயணிப்பதால் வேகத்தை குறைத்து விவேகத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வாகன பராமரிப்பு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். நவ கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் பயணம் செய்வதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். காணாமல் போன விலை உயர்ந்த பொருள் உங்களுக்குக் கிடைக்கும்.
நினைத்த காரியம் நிறைவேறும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து தொடங்குங்கள் வெற்றிகள் கிடைக்கும். கோபமான பேச்சுக்களைத் தவிர்த்து விடுங்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கால்வழி பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதத்தில் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். ராசியில் சனி, இரண்டாம் வீட்டில் குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் செவ்வாய்,சூரியன், எட்டில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.
லாப ஸ்தானத்தில் கேது வார துவக்கத்தில் ஏழாம் வீட்டில் செவ்வாய் சூரியன் இணைந்து சஞ்சரிப்பதால் திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும்.கௌவரம் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தொழில் அபிவிருத்தி ஏற்படும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். தொட்டதெல்லாம் பொன்னாகும்.
நீண்ட நாட்களுக்கு காணாமல் போன விலை உயர்ந்த பொருட்களை கண்டுபிடிப்பீர்கள். ஆரம்பித்த வேலைகள் பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடைபெற வாய்ப்புள்ளது. எட்டாம் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் நகை, பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். அதே போல செவ்வாய் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு இடம் மாறுவதால் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். கால்வலி பிரச்சினைகள், அடி வயிறு வலி பிரச்சினைகள் தொடர்பாக மருத்துவ செலவுகள் வரும்.
கும்பம்
சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே ஆடி மாதத்தில் உங்கள் ராசிக்கு பல அற்புதங்கள் நிகழப்போகிறது. உங்கள் ராசிக்குள் குரு, நான்காம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் புதன் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரியனின் பயணம் தொடங்குகிறது.
ஏழாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய், பத்தாம் வீட்டில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த மாதத்தில் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பண வரவு அற்புதமாக இருக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் வரும்.
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு கட்டும் விசயமாக பேசி முடிவு செய்யலாம். சிலர் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். அரசு வேலைக்காக முயற்சி செய்ய ஏற்ற மாதம். கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. பேச்சில் கடுமை காட்ட வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
பொறுப்பும், கடமையும் அதிகரிக்கும். உங்களுடைய திட்டங்களை அதிக அளவில் வெளியில் சொல்ல வேண்டாம். வெற்றி பெறும் வரைக்கும் கவனமும் விழிப்புணர்வும் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதத்தில் ஆடி அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு செய்வது நன்மையை அதிகரிக்கும்.
மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, நான்காம் வீட்டில் புதன், ஐந்தில் சூரியன், செவ்வாய், ஆறில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் கேது, லாப ஸ்தானத்தில் சனி, விரைய ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ஐஸ்வர்யங்கள் அதிகரிக்கப்போகிறது. திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல மாதம். முக்கியமான பைல்களில் கையெழுத்து போடும் போது கவனமும் விழிப்புணர்வும் அவசியம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு நகை, ஆடை சேர்க்கை ஏற்படும்.
பிள்ளைகளுக்கு உயர்கல்வி விசயமாக செலவு செய்வீர்கள். வேலையில் புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த மாதத்தில் உடல் நலத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை.