வந்துவிட்டது ஏடிஎம் போன்று ஆதார் பி.வி.சி கார்டு: எவ்வாறு வாங்க வேண்டும்?
தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்த மக்களின் அடையாளமாக ஆதார் அட்டை மாறியுள்ளது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும். அதன் மூலம் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற இயலும்.
ஆனால் தற்போது கொடுக்கப்பட்டுள்ள அட்டைகள் மழை நீர் பட்டாலே கிழிந்து போகும் நிலையில் தான் தயார் செய்துள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் அட்டை போன்று பி.வி.சி அட்டைகள் மூலம் தற்போது ஆதார் வந்துவிட்டது. இதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் தன்னுடைய ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணை பயன்பத்தி பி.வி.சி. அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
uidai.gov.in அல்லது resident.uidai.gov.in என்ற தளத்திற்கு சென்று ஆதார் அடையாள எண், விர்ச்சுவல் அடையாள எண் ஆகியவற்றை உள்ளீடாக செலுத்தி நீங்கள் பி.வி.சி. அட்டையை பெற்றுக் கொள்ள இயலும். இதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
செயல்முறை
- uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற இணையத்திற்கு முதலில் செல்லவும். பின்பு ஆர்டர் ஆதார் பி.வி.சி. கார்ட் என்ற பகுதிக்கு செல்லவும்
- உங்களின் 12 இலக்க ஆதார் அடையாள எண் அல்லது 16 இலக்க விர்ச்சுவல் ஐடியை உள்ளீடாக செலுத்தவும்
- அதன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு கோடு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை தவறு இல்லாமல் உள்ளிட வேண்டும்.
- ஒரு வேளை உங்களின் தொலைபேசி எண் உங்களின் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால் அதற்கான இடத்தில் டிக் செய்யவும். ஆதாருடன் இணைக்கப்படாத தொலைபேசி எண்ணை உள்ளீடாக தரவும்.
- பின்பு உங்களின் போனுக்கு வரும் ஒ.டி.பி. எண்ணை அதில் கொடுத்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
- ப்ரிவியூ செய்த பிறகு இந்த அடையாள அட்டைக்கான பேமெண்ட்டை செலுத்தவும். நெட்பேங்கிங், க்ரெடிட் அட்டை மற்றும் டெபிட் அட்டை ஆகியவை மூலம் ரூ. 50- ஐ செலுத்த முடியும்.
- பணம் செலுத்திய பிறகு பேமெண்ட் ஸ்லிப்பை டவுன்லோடு செய்து கொள்ளவும். உங்களின் ஆதார் பிவிசி அட்டை ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். டெலிவரிக்கு என்று பணம் கொடுக்க தேவையில்லை. முதலில் செலுத்திய ரூ.50லேயே இதுவும் அடங்கிவிடும்.