நிஜ வாழ்க்கையிலும் ஒரு டோரதி கதை - கார்த்திக் சுப்பராஜை நெகிழ வைத்த தம்பதி!
டோரத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் கதையைப் போன்றே தங்களது வாழ்க்கையிலும் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட நிஜ வாழ்க்கை தம்பதி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை நேரில் சந்தித்து கண்ணீருடன் வாழ்த்தியுள்ளனர்.
சிறுவயது நண்பர்களான சுப்பு மற்றும் கார்த்தி ஆகியோரின் நட்பு, சுப்பு தனது பாலின அடையாளத்தை உணர்ந்து கொள்ளும் தருணம், அதனைத் தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சமூக ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு டோரத்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உணர்வுப்பூர்வமான இந்தக் கதைக்களம் காரணமாக படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தில் சுப்பு, தான் திருநங்கை என்பதை உணர்ந்து கொள்ளும் நிலையில், அவரது சிறுவயது நண்பரான கார்த்தியுடன் அவருக்கு ஏற்படும் ஆழமான பிணைப்பு மற்றும் அந்த உறவு அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
நிஜ டோரதி தம்பதி
நட்பு, அன்பு, அடையாளம் மற்றும் சமூகத்தின் பார்வை என பல்வேறு அம்சங்களை திரைப்படம் பேசுகிறது. இந்த நிலையில், டோரத்தி படத்தின் கதையைப் போலவே தங்களது வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளதாகக் கூறும் நிஜ வாழ்க்கை தம்பதி குறித்த தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டோரத்தி திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த திரையரங்கிற்கு கார்த்திக் சுப்பராஜ் சென்றிருந்தார்.
அப்போது அவரை சந்தித்த திருநங்கை ஒருவர், தாங்களும் படத்தில் வரும் கதாபாத்திரங்களைப் போலவே சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்ததாகவும், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

டோரத்தி திரைப்படத்தைப் பார்த்தபோது, அதில் இடம்பெற்றிருந்த சில சம்பவங்கள் தங்களது சொந்த வாழ்க்கையை நினைவுபடுத்தியதாகவும் அவர் உணர்ச்சிப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார்
தங்களது வாழ்க்கைக் கதையுடன் திரைப்படத்தின் கதை பல இடங்களில் ஒத்துப் போனதாகக் கூறிய அந்த தம்பதி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை கட்டியணைத்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
No Words.... #Dorothy ❤️ https://t.co/nXCsEP5syf
— karthik subbaraj (@karthiksubbaraj) October 3, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |