40 ஆண்டுகள் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண்ணில் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தாங்கள் விரும்பும் தொழிலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் காணப்படுகின்றது அந்த வகையில் பெண்கள் தங்களுக்கு மிகவும் பிடித்தமான துறைகளில் உச்சம் தொட்டுள்ளனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் காயா நகரின் பிரதி மேயராக சிந்தா தேவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீந்தா தேவி கடந்த 40 ஆண்டுகளாக அதே நகரின் துப்புரவு தொழிலாளியாக கடமையாற்றிய சிந்தா தேவி இவ்வாறு பிரதி மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் குறித்த பெண் இந்த வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.
பீகாரில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 17 மேயராசனங்களில் 16 ஆசனங்களில் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் 11 பிரதி மேயர் ஆசனங்களில் பெண்கள் தெரிவாகியுள்ளனர்.
இவற்றில் சிந்தா தேவி விசேடமான வெற்றியை பெற்றுள்ளார். துப்புரவு தொழிலாளி ஒருவர் இவ்வாறு பிரதி மேயர் பதவிக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதல் தடவை ஆகும்.
சிந்தா தேவி 16,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் சிந்தாதேவி இந்த சாதனை வெற்றியை படைத்துள்ளார்.
கணவரை இழந்த 60 வயதான சிந்தா தேவி, காயா நகர வீதிகளை துப்புரவு செய்யும் பணியில் 40 ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார்.
சிந்தா தேவியின் மூன்று மகன்களும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிந்தாதேவி தேர்தலில் போட்டியிடுவதற்கு சற்று தயங்கிய போதிலும் சக துப்புரவு பணியாளர்கள் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
துப்புரவு பணியில் சிந்தா தேவியின் அர்ப்பணிப்பு அபாரமானது எனவும் பெருந்தொற்று காலத்தில் அவர் மிக சிறந்த முறையில் சேவையாற்றினார் எனவும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
காயா நகரம் தலித்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்குவதாகவும், துப்புரவு பணியாளர் ஒருவர் இவ்வாறு பிரதி மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக நகர மேயர் கணேஸ் பஸ்வான் தெரிவிக்கின்றார்.