சாவு வீட்டில் சிரித்தபடி புகைப்படம் எடுத்த உறவினர்கள்... எழுந்த சர்ச்சை! பின்னணியில் உள்ள காரணம்
கல்யாண வீட்டில் மகிழ்ச்சியும், சாவு வீட்டில் துக்கமும் தான் காலம் காலமாக நடைமுறையை பின்பற்றி வருகிறோம். ஆனால் சாவு வீட்டில் புன்னகையுடன் குடும்பம் ஒன்று எடுத்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளா பத்தனம் திட்டா மல்லப்பள்ளியை சேர்ந்த பனவெலில் குடும்பத்தினர்களின் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துள்ளார்.

புன்னகையுடன் புகைப்படம்
இவரது கணரும் கிறிஸ்தவ மதபோதகரும் ஏற்கனவே மரணமடைந்தவர். இவர்களுக்கு 9 குழந்தைகள் மற்றும் 19 பேரக்குழந்தைகள் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். 4 தலைமுறையினர்களை கொண்ட அவர்கள் மூதாட்டியின் இறுதி மூச்சு தருணத்தில் வந்துள்ளனர்.
மூதாட்டி இறந்ததும் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.
இதனையடுத்து, அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கண்போர்கள் இது என்ன எழவு வீடா அல்லது கல்யாண வீடா? என எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எங்களின் நெகிழ்வான தருணம்
இதுகுறித்து, மறைந்த மூதாட்டியின் மூத்த மகன் அருட்தந்தை ஜார்ஜ் உம்மனோ(68) தெரிவிக்கையில், மற்றவர்களின் கருத்து எங்களுக்கு கவலையில்லை. எனவே, நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம்.
அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம். அப்போது எடுத்த ஒரு படம்தான் இது.
10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம் என தெரிவித்துள்ளார்.