மோமோஸ் சாப்பிட்ட அடுத்த நொடியே உயிரிழந்த நபர் - எச்சரிக்கை விடுத்த மருத்துவர்கள்
மோமோஸ் சாப்பிட்டு ஒருவர் உயிரிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோமோஸை அப்படியே விழுங்கியதால் அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
அண்மையில் 50 வயது நபர் ஒருவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். அவரது உடற்கூறாய்வின்போது அவரது மூச்சுக்குழாயில் ஒரு முழு மோமோஸ் சிக்கியிருந்தது.
அதனால் மூச்சுத்திணறி அந்த நபர் உயிரிழந்தார். வாயில் வைத்தவுடன் வழுக்கிச் செல்லும் மோமோஸின் தன்மையும், அதன் சிறிய அளவுமே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக் காரணம்.
அதனால் மோமோஸ் சாப்பிடும்போது அதை நன்றாக மென்று உண்ண வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோமோஸ் எங்கிருந்து வந்தது?
நேபாள நாட்டில் உருவான 'MOMO' என்ற உணவு தற்போது அண்டை நாடான இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக டார்ஜிலிங், லடாக், சிக்கிம், அசாம், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆரம்பத்தில் பிரபலமாக காணப்பட்டது.
தற்போது தென் தமிழகத்திலும் இந்த உணவு வர தொடங்கியுள்ளது. இந்த மோமோஸ் உணவானது, கொழுக்கட்டை போன்று ஆவியில் வேக வைத்து செய்யப்படும் ஒரு வகை உணவு.
சிக்கன், காய்கறி என பலவகை ஸ்டஃப்புகளை கொண்டிருக்கும்.
எச்சரிக்கை....
எந்த உணவாக இருந்தாலும் மென்று சாப்பிட வேண்டும்.
உணவை மெல்லும் போது உதட்டை மூடி மெல்ல வேண்டும்.
அப்போதுதான் உமிழ்நீர் நன்றாக உணவில் கலக்கும். வாய்க்குள் நுழைந்த உணவை விழுங்கும் வரை உதட்டை பிரிக்காமல் மென்று சாப்பிடுவதே ஜீரணத்திற்கு நல்லது.
என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட உணவை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். குறிப்பாக வேகவேகமாக சாப்பிடுவதை விடவும் மிக மெதுவாக மென்று சாப்பிடுவது தான் நல்லது. எனவே சாப்பாடு தெரிவில் காட்டும் அக்கரையை சாப்பிடும் விதத்திலும் காட்ட வேண்டும்.