கொரோனா நோயாளி இறப்பு... மருத்துவமனையையும் டாக்டரையும் அடித்து நொறுக்கிய கும்பல்!
கொரோனா நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததால், குடும்பத்தினர்கள் மருத்துவமனையையும், டாக்டரையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தகவல் அறிந்த வந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.
இதனால் பதற்மடைந்த மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். மேலும், டாக்டர் சேனாபதி ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார்.
ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து டாக்டரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த டாக்டர், அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மருத்துவர் தாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நிலையா? என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதனையடுத்து, தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அசாம் மருத்துவ சேவை சங்கம் வலியுறுத்தி உள்ளது.
Brutality against a Doctor post MBBS , rural posting is highly condemable . I demand an impartial inquiry and Strict action against those culprit. pic.twitter.com/dduekwvDih
— Dr Numal Momin MD. (@DrNumal) June 1, 2021