ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்! 104 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன்
சட்டீஸ்கர் மாநிலத்தின் ஜாங்கிர் சாம்பா மாவட்டத்தை சேர்ந்த 11 வயதான ராகுல் சாஹூ என்ற சிறுவன் கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். சுமார் 80 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீடகும் பணிகள் உடனடியாக துவங்கின.
மகோரடா டெவலப்மெண்ட் பிளாக்கில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டு இருந்த ராகுல் சாஹூ ஜூன் 10 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டான். 11 வயதான ராகுல் சாஹூ சுமார் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான்.

104 மணிநேரம் 500 பேரின் போராட்டம்
இவனை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், ராணுவம், போலீஸ் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் அடங்கிய சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மீட்பு பணிகள் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. மீட்பு பணிகள் மொத்தம் 104 மணி நேரங்கள் நடைபெற்றது.

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்து மீட்பு பணிகளில் நேரடி கவனம் செலுத்தி வந்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், மீட்பு பணி நடவடிக்கைகள் குறித்து அவ்வப் போது ட்விட்டரில் தகவல் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் ராகுல் சாஹூ மீட்கப்பட்டது அனைவருக்கும் நிம்மதி அடைய செய்து இருக்கிறது.
தற்போது தீவிர சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவன் நலமுடன் இருப்பதாகவம், மருத்துவர்கள் உடன் இருந்து கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.