ஐபிஎல் 2022; பெங்களூரு அணியில் மீண்டும் சேர இந்திய வீரரின் ஆசை!
ஐபிஎல் 2022 ஆண்டுக்கான தொடர் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 590 வீரர்களை தங்கள் அணிக்கு வாங்க 10 அணிகளும் பல கோடி ரூபாய்களுடன் போட்டி போட உள்ளதால் இந்த ஏலத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மெகா ஏலத்துக்கு முன்பாக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் இளம் வீரர் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது.
இருந்தாலும், அந்த அணியின் கேப்டனாக திகழ்ந்த விராட்கோலி விலகியதால் யாரை கேப்டனாக செயல்படுத்துவது என அந்த அணியும் குழப்பத்தில் உள்ளது. இதெல்லாம் ஒருபக்க சென்றாலும், பெங்களூரு அணியின் அஸ்திவாரமாக திகழ்ந்த யுஸ்வெந்திர சஹால் ஐபிஎல் 2022 சீசனுக்கான பெங்களூர் அணியில் தக்க வைக்கப்படவில்லை.
பெங்களூரி அணியின் சொந்த மைதனாத்தில் சிறப்பான பந்துவீச்சாளராக திகழும் அவர் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெங்களூர் அணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 138 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில், இதைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் சஹால் பேசிய போது, “பெங்களூரு அணிக்காக விளையாட எனக்கு விருப்பம் உள்ளது.
ஏனெனில் அந்த அணியில் கடந்த 8 வருடங்களாக விளையாடினேன். ஆனால் அதற்காக மற்ற அணிக்கு விளையாட சென்றால் அங்கு நான் மோசமாக உணர்வேன் என அர்த்தமில்லை. இது மெகா ஏலம் என்பதால் அனைவரும் ஏலத்தொகையில் கவனம் செலுத்துவார்கள். எப்போதும் எனது 100% அர்ப்பணிப்பை கொடுப்பேன்.
மேலும், எந்த புதிய அணிக்கு நான் விளையாட சென்றாலும் அங்கு என்னை உட்படுத்திக் கொள்ள சில நேரம் மட்டுமே தேவைப்படும். அதனால் தான் நம்மை தேர்ச்சியான கிரிக்கெட் வீரர்கள் என கூறுகிறோம்” என கூறியுள்ளார்.
சமீபகாலங்களாக சஹால் நல்ல பார்மில் இல்லாத காரணத்தால் அவரை பெங்களூர் அணி தக்கவைக்க வில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா காரணமாக நிறைய போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெறாததாலும், மற்ற ஆடுகளத்தில் சஹாலின் பவுலிங் பெரிய எதிர்ப்பார்ப்பை கொடுக்காது என பெங்களூரு அணி அவரை தக்க வைக்க யோசிக்கவில்லை என தெரிகிறது.
இறுதியாக மெகா ஏலத்தில் எவ்வளவு கோடிகள் சம்பளமாக எதிர்பார்க்கிறீர்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் எழுப்பிய கேள்விக்கு சஹால் அளித்த பதில், “எனக்கு 15 – 17 கோடிகள் வேண்டும் என்று நான் கூறமாட்டேன். எனக்கு 8 கோடிகள் போதுமானது” என கூறியுள்ளார்.