ஒருசில நாளில் முடிய இருந்த லட்சியப்பயணம்! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கேரள இளைஞர் ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் செய்து மேற்கொண்ட லட்சியப்பயணம் முடியாத நிலையில் இறுதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கேரள இளைஞர்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இவர் பீகார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஸ்கேட்டிங் மீது அதிக ஈடுபாடு உடைய அனஸ் ஹஜாஸ், நிறைய பேருக்கு இதனை கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்கேட்டிங் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பயணம் ஒன்றை மேற்கொள்ள அனஸ் முடிவு செய்துள்ளார்.
அதுவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, தன்னுடைய ஸ்கேட்டிங் போர்ட் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்றும் அவர் முடிவு செய்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சோகம்
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய அனஸ் ஹஜாஸ், காஷ்மீரில் தனது பயணத்தை முடித்த பிறகு, பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்திருந்ததாக கூறி இருந்தார்.
ஹரியானா - பஞ்சாப் பாடர் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக டிரக் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த போதும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்னும் சில தினங்களில், அவர் காஷ்மீரை அடைந்து, தனது சாதனை பயணத்தை முடித்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில், அவர் விபத்தில் இறந்த சம்பவம், அவரது நெருங்கி வட்டாரத்தில் உள்ள பலரையும் கதறித் துடிக்க வைத்துள்ளது.