நடிகை யாஷிகா கார் விபத்து சம்பவம்.. பரபரப்பான வாக்குமூலத்தை அளித்த ஆண் நண்பர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்... இவர் தனது தோழி வள்ளி ஷெட்டி பவனி மற்றும் ஆண் நண்பர்கள் இருவருடன் கடந்த 24ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னை வந்துக்கொண்டிருந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.
இதையடுத்து, தோழி பவனி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், யாஷிகாவின் நண்பர் நிரூப் நந்தகுமார் என்பவர் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலம் பல உண்மைகளை வெளிவருகிறது.
அதில், யாஷிகாவும், அவரது நண்பர்களும் கடந்த 24ம் தேதி இரவு 11 மணி அளவில், உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி வந்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வந்துகொண்டிருந்தபோது, சூளேரிக்காடு பேருந்து நிறுத்தம் அருகே, யாஷிகா அதிவேகமாக ஓட்டி வந்த கார், நிலை தடுமாறி சாலைக்கு வலதுபுறம் இருந்த இரும்பு தகட்டின்மீது மோதி, தலைகீழாக கவிழ்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, காரில் இருந்த 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டதால், அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக, யாஷிகா, சையது மற்றும் அமீர் ஆகிய 3 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இதனிடையே, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த யாஷிகாவின் தோழி பவணி, வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பூஞ்சேரி அரசு மருத்துவமனையிலேயே இறந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், யாஷிகாவின் நண்பர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டரைச் சந்தித்து, இந்த விவரங்களை கூறியதாக FIRல் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில், யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அளவில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் (279 IPC), ஆபத்தான செயலின் மூலம் மற்றவர் உயிருக்கு தீங்கு விளைவித்தல் (337 IPC), வாகனத்தை அலட்சியமாக ஓட்டுவதன் மூலம் விபத்து ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் (304 A) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த FIRல் மிக முக்கிய அம்சம் என்னவெனில், குடிபோதையில் வாகனம் ஓட்டப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், நிரூப் நந்தகுமார் அளித்துள்ள வாக்குமூலத்தில், யாஷிகாவும், அவரது நண்பர்களும் உணவகத்தில் உணவருந்தியதாக மட்டும் தான் சொல்லப்பட்டதே ஒழிய, மது அருந்தியதாக எங்கும் கூறப்படவில்லை.
எனினும், தற்போது மருத்துவமனையில் யாஷிகா சிகிச்சைபெற்றுவரும் நிலையில், அவர் குணமடைந்த பிறகு போலீசார் அவரிடம் மேலும் சில விசாரணைகள் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.