தென்கொரியாவில் முதலாளி உயிரை காப்பாற்றிய நாய் - தீயணைப்பு படையின் கவுரவ தூதராக நியமனம்!
நாய் என்றாலே நன்றியுள்ள பிராணி தான் சொல்வார்கள். அதனை நிரூபித்த தென் கொரொயாவின் நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தென் கொரியாவில், தனது முதலாளியின் உயிரை காப்பாற்றிய நாய்க்கு அந்நாட்டு அரசு கவுரவித்து பதவியை வழங்கி பெருமைப்படுத்தியிருக்கிறது.
தென்கொரியாவின், ஹொன்சோங் கவுண்டியில் வசிக்கும் 3 வயது நாய் பேக்கு (Baekgu). இந்த நாய், தனது முதலாளி 90 வயதான கிம் என்ற பெண்மணியின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
அந்த நாயின் முதலாளிக்கு மறதி நோய் இருக்கிறது. முதலாளியான கிம், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி காணாமல் போனார். அதன் பிறகு போலீசார் அந்த பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்த போது, கிம் தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நெல் வயலில் இருப்பதைக் கண்டார்கள்.
நெல் வயலில் அவர் மயங்கி விழுந்ததால், அவ்வழியாக சென்றவர்களால் அவர் அங்கே விழுந்து கிடப்பதை பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த வயதான பெண்மணியின் விசுவாசமான நாய் பேக்கு அவளை கண்டுபிடித்து, நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்பதை நிரூபித்தது.
பேக்குவை பாராட்டிய போலீசார், கிம் என்ற அந்த பெண்மணியை அவரது நாய் காப்பாற்ற வரவில்லை என்றால் அந்த வயலில் கிம் இறந்திருப்பார் என்று தெரிவித்தனர். கிம்மால் எழுந்திருக்க முடியாத நிலையில், வானிலையும் மோசமாக இருந்த காரணத்தினால், தனது முதலாளியை விட்டு விலகாமல், அவர் அருகிலேயே இருந்துள்ளது அந்த நாய்.
அந்த விசுவாசமான நாய் குளிரால் நடுங்கிய அந்த பெண்மணியின் உடலுக்கு கதகதப்பை உண்டாக்க அருகிலேயே இருந்துள்ளது.
ஹோன்சோங் கவுண்டியின் கவர்னர் யாங் சியுங்-ஜோ இது குறித்து கூறுலையில், "கோவிட் -19 காரணமாக ஒரு சவாலான இந்த நேரத்தில், பேக்கு நம்ப முடியாத அதிசயத்தை நிகழ்த்தி அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது என்றார்.
பேக்கு நாயின் இந்த விசுவாசத்தை பாராட்டி, அந்த நாய்க்கு விருது வழங்கியதோடு, தேசிய தீயணப்பு படையின், கவுரவ வீரர், தீயணைப்பு படை தூதர் என அந்த நாய் நியமனம் செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
