மரித்து விட்டது மனிதம் - நாதியற்று நாடற்றவர்களாக மாறும் ஆப்கானிஸ்தான் மக்களின் அவலநிலை!
தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் ஒவ்வொரு புகைப்படங்களும், வீடியோக்களும் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. மனிதாபிமானம் செத்துபோய்விட்டதாக உலக மக்கள் உணர்கிறார்கள். நாமெல்லாம் நமது தாய் திருநாட்டை விட்டுச் செல்வதற்கு பல முறை யோசிப்போம்.
ஆனால் ஆப்கானியர்களோ தங்களது தாய் பூமியை விட்டு எப்படியாவது தப்பித்துச் செல்ல வேண்டும் என்றே எண்ணுகிறார்கள். அவர்களின் இந்த அச்சத்திற்கு தலிபான்தான் காரணம். 5 கால கொடூர ஆட்சியே இதற்கு முக்கிய காரணம். உலகில் நரகம் என ஒன்று இருந்தால் அது தலிபான்கள் அதிகாரத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் தான்.
அதிபர் அஷ்ரப் கானியோ வேறு நாட்டுக்குத் தப்பியோடி விட்டார். ஆனால் அப்பாவி ஆப்கானியர்கள்தான் படுகுழிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளனர். நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த மக்கள் காபூல் விமான நிலையங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஆனால் அனைத்து நாடுகளும் விமானப் போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. இன்ன பிற நாடுகள் அங்குள்ள தங்களது நாட்டு மக்களை மீட்கவே மீட்பு விமானங்களை அனுப்பி வருகிறது.
அந்த மீட்பு விமானங்களில் தொற்றிக் கொண்டு ஆப்கானியர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்கிறார்கள். இப்படித்தான் நேற்று அமெரிக்க மீட்பு விமானத்தின் சக்கரத்தில் தஞ்சமடைந்த மூன்று பேர் வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி காண்போர் நெஞ்சை உலுக்கி எடுத்தது. இந்நிலையில், தற்போது மற்றொரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
நேற்று அமெரிக்காவின் போயிங் ரக சி 17 கார்கோ விமானம் அந்நாட்டு அதிகாரிகளையும் மக்களையும் மீட்க காபூல் வந்தடைந்தது. ஆனால், இந்த விமானத்தை ஆப்கானியர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் ஏறுவதற்கு முன்பே ஆப்கானிஸ்தான் மக்கள் ஏறிக் கொண்டார்கள்.
வெறும் 150 பேர் மட்டுமே செல்லும் இந்த விமானத்தில் 640 பேர் பயணம் செய்துள்ளனர். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பல்வேறு விவாதங்கள் எழுப்பியுள்ளது. அகதிகளாக அமெரிக்கா சென்றுள்ள இவர்கள் டெக்சாஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"The Crew Made the Decision to Go:" Inside Reach 871, A US C-17 Packed With 640 Afghans Trying to Escape the Taliban | @TaraCopp and @MarcusReports https://t.co/lf3LajxzzX pic.twitter.com/6wg82LtfRc
— Defense One (@DefenseOne) August 16, 2021