வெடித்துச் சிதறிய உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி! சிறிய தவறால் பாரிய அசம்பாவிதம்
உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன்தொட்டி வெடித்து சிதறியதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய மீன்தொட்டி
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் வணிகவளாகம் ஒன்றில் ஹொட்டல் மற்றும் மீன் கண்காட்சியும் உள்ளது.
குறித்த அக்வேரியத்தில் 1500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இந்த உருளை அக்வேரியம் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
மீன் காட்சி தொட்டியில் இருந்த 1 மில்லியன் லிட்டர் நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. இதனால் உள்ளூர் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

உடைந்தது எப்படி?
உடனே தாமதிக்காமல் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதியை கொண்டுவந்ததோடு, ஹொட்டலில் வசித்த மக்களை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். மேலும் உடைந்த கண்ணாடி பொருட்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
குறித்த மீன் காட்சி தொட்டி உருளை உலகின் மிகப்பெரியது என்றும், அத்தருணத்தில் ஒரு நிலநடுக்கம் போன்று இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த அசம்பாவிதத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் காயமடைந்த சிலரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்த அக்வேரியத்தின் வெப்பநிலை பராமரிப்பு கருவிகளில் ஏற்பட்ட கோளாறே காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.